புதுச்சேரி:
மிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், இரு மாநிலங்களிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை (30/03/2021) மாலை 04.30 மணியளவில் புதுச்சேரி வரவுள்ளார். அதைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அனைத்து வேட்பாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் மூன்றடுக்கு பாதுகாப்பும், விழா நடைபெறும் இடத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, பிரதமரின் வருகையை முன்னிட்டு நாளை (30/03/2021) ஒருநாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதில், பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரி வான்வெளியில் நாளை விமானங்கள், ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம் மக்கள் கூடுவதற்குத் தடையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரியைத் தொடர்ந்து நாளை (30/03/2021) பிற்பகல் தாராபுரத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிக்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.