உடல்நலத்தைப் பேணும் ”ஃபிட் இந்தியா” திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டில்லி:

வ்வொருவரும் உடல்நலனை பேணும் வகையில் ”ஃபிட் இந்தியா” என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி  இன்று தொடங்கி வைத்தார்.

மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றது முதல் நாடு மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. ஏற்கனவே நாட்டின் தூய்மையை வலியுறுத்தி  துாய்மை இந்தியா திட்டமும், யோகாவை பிரபலப்படுத்தும் நோக்கில்  யோகா தினம்,  மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா என பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

அதே வகையில் தற்போது, ஃபிட் இந்தியா என்ற திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுஉள்ளது. இதன்படி,  ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வலியுறுத்தும் வகையில் இந்த திட்டம் இன்று  தொடங்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டில்லியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது,, “ நமது கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக எப்போதுமே பிட்னஸ் உள்ளது. ஆனால்,  இப்போது உடற்பயிற்சியில் அலட்சியம் உள்ளது.

பல தசாப்தங்களுக்கு முன்பு, சராசரி மனிதன்,  ஒருநாளைக்கு 8 முதல் 10 கி.மீட்டர் வரை நடந்தான். எனவே, ஓடுங்கள் அல்லது சைக்கிளிங் செய்யுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியால் உடல் செயல்பாடு குறைந்துள்ளது. நாம் குறைந்த அளவே தற்போது நடக்கிறோம். அதேவேளையில், நாம் குறைவாக நடப்பதாக அதே தொழில்நுட்பம் நம்மிடம் கூறுகிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கலந்து கொண்டார். கிரண் ரிஜிஜூ பேசுகையில், “ சக குடிமக்களின் ஒத்துழைப்போடு பிட் இந்தியா இயக்கத்தை நாம் புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்வோம்.  ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளில் இந்த இயக்கம்  துவங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

இன்று ஃபிட் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி, முன்னதாக நாடு முழுவதும் உள்ள கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்க, வேண்டுகோள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.