வாரனாசி:

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனது வாரனாசி தொகுதிக்கு 6 மாதங்கள் கழித்து இன்று வருகிறார். பல்வேறு நலத்திட்டங்களுடன் அவர் வருகை தருகிறார். நாட்டின் மூன்றாவது மகாமனா எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைக்கிறார்.

அதோடு பல உள்கட்டமைப்பு பணிகள், ரயில்வே, நிதியுதவி திட்டஙகள், தூய்மை திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். மொத்தம் ரூ. 450 கோடி மதிப்பிலான 19 திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

முதல் நிகழ்ச்சியாக வாரனாசியில் கைத்தறி வர்த்தக மையமாக விளங்கும் பதலால்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இங்கு வததோரா, சூரத் வழியாக வாரனாசியில் இருந்து குஜராத் செல்லும் மகாமனா ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில், முன்னாள் இந்து மகாசபா தலைவர் மதல் மோகன் கால்வியா நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. அவர் மகாமனா என்றும் அழைக்கப்பட்டார். வாரனாசியில் இருந்து வெள்ளிக்கிழமை அன்றும், வததோராவில் இருந்து புதன்கிழமை அன்றும் இயக்கப்படும்.

இந்த ரயில் பெட்டிகளில் அப்பர் பெர்த் செல்வதற்கு பிரத்யே ஏணி அமைக்கப்பட்டுள்ளது. நவீன கழிப்பிடம், பெரிய அளவிலான முகம் பார்க்கும் கண்ணாடி, நடைமேடை வாஷ் பேசின், கட்டுப்பாடுடன் கூடிய தண்ணீர் குழாய், எல்இடி விளக்குகள், கழிப்பிடத்தில் குப்பை தொட்டி உள்பட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் படுக்கை வசதியை சுட்டிக்காட்டும் இரவு நேர விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது.

ஜல் ஆம்புலன்ஸ் (நீர் ஆம்புலன்ஸ்) , ஜல் சவ் வாஹினி (உடல்களை எடுத்துச் செல்ல நீர் சார்ந்த வாகனம்) திட்டங்கள், உத்கர்ஷ் வங்கி என்ற நுண் நிதி அமைப்பையும் தொடங்கி வைக்கிறார். ரூ. 400 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.