டில்லி:

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் தேப் குமாரை, டில்லிக்கு வருமாறு பிரதமர் மோடி  அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குமார் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். மகாபாரத காலத்திலேயே இணையதளம் வசதிகளும், செயற்கைக்கோள் தொடர்புகளும் இருந்தன என்றும், படித்த இளைஞர்கள், அரசு வேலை கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் பீடா கடை வைத்து பிழைக்கலாம் என்றும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும், மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதக்கூடாது என்றும், மாடு மேய்க்கும் தொழிலில் இளைஞர்கள் ஈடுபடலாம்என்று அவர் அடுத்தடுத்து கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.  இதேபோல், 1997-இல் உலக அழகி பட்டம் வென்ற டயானா ஹேடன் குறித்து அவர் கூறிய கருத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மே மாதம் 2-ஆம் தேதி டில்லி வந்து தன்னை சந்திக்குமாறு திரிபுரா முதல்வர் பில்லாப் குமாருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்று அவர்  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்திக்க வேண்டும் என்று பாஜக தலைமையிலிருந்து பில்லாப் குமாருக்கு கூறப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இச்சந்திப்பின்போது, பிப்லப் குமாரை இருவரும் கண்டித்து அறிவுரை கூறுவார்கள் என்று தெரிகிறது.