புதுடெல்லி:

வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய எத்தகைய உச்சகட்ட நடவடிக்கைக்கும் தயாராக இருக்குமாறு, வருமான வரித்துறையினருக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கவரி, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.5 லட்சம் மறைமுக வரி, வருமான வரி உட்பட ரூ. 1 லட்சம் கோடிக்கான நேரடி வரி விதிப்பில் மூலம் இந்த நிதி பற்றாக்குறையை ஈடு செய்ய வேண்டும் என பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகப்படியான ரெய்டுகளை நடத்த வேண்டும் என்பதும், தனியார் மற்றும் கார்பரேட் நிறுவனங்களை அதிக அளவுக்கு வரியை செலுத்த வைக்கவேண்டும் என்பதுதான் அர்த்தம் என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

பெரிய அளவிலான இந்த இலக்கை அடைய இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. வரி ஆய்வாளரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளோம். நீங்கள் காத்திருந்து பாருங்கள் என்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில், இத்தகைய ரெய்டுகள் வாக்காளர்களை கவருவதற்காக திட்டமிடப்பட்டால், வருவாய் பற்றாக்குறை அதற்கு தடையாகவே இருக்கும் என்பதும் வருமான வரித்துறையினரின் கருத்தாக உள்ளது.

ஜனவரி 18-ல் நடக்கும் மறு ஆய்வுக் கூட்டத்தில், எவ்வளவு வரி வசூல் செய்ய முடியும் என்பதான இலக்கை சமர்ப்பிக்குமாறு , வருமான வரித்துறை தலைமை ஆணையர்களுக்கு முதன்மை வருமான வரித்துறை தலைமை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

வழக்கம்போல் நடைபெறும் வரி வசூல் தற்போதைய தேவையை ஈடுகட்டுவதாக மட்டும் இந்த கூட்டம் அமையாது என்றும், டிடிஎஸ் பிடித்தம் குறித்த சரிபார்ப்பு, அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் உள்ளூர் தகவல்கள் அடிப்படையில் புதிய வரி வசூப்பை மேற்கொள்வது,வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க ஆய்வு நடத்துவது, நிலுவை வரியை வசூலிப்பதற்கான கூட்டமாக இது இருக்கும் என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரி ஏய்ப்பில் ஈடுப்பட்ட எத்தனை பேரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சொத்துகள் ஏலம் விடப்பட்ட விவரம், வரி ஏய்ப்பாளர்கள் மீதான விசாரணை, தண்டனை குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்குமாறு அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.