ராஜீவ்காந்தி கொலை: கைதிகள் விடுதலை குறித்து கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்!

டெல்லி:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர்  சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்தியஅரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், தன்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை, எனவே தன்னை விடுதலை செய்ய வேண்டும்  என உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

‘இதற்கிடையில்,  தன்னை விடுதலை செய்ய கோரி நளினி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு ஆஜரான மத்தியஅரசு தரப்பு வழக்கறிஞர், நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று பதில் மனு தாக்கல் செய்தது. மேலும், தமிழக அமைச்சவையின் கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறியது.

இதற்கிடையில், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் தாக்கல் செய்த மற்றொரு வழக்கில்  வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்பட 7 பேரையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி விடுவிப்பது குறித்து, மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்தஆண்டு அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அதன் மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மத்தியஅரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நளினி உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. அவர்கள் விடுதலை தொடர்பாக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.