மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களிடம் NEET, JEE தேர்வு குறித்து பேசவில்லை; தேர்வுக்கு பதில் பொம்மையா: ராகுல் காந்தி விமர்சனம்

புது டெல்லி:
நீட் ஜேஇஇ தேர்வு குறித்து ஆலோசிக்க மாணவர்கள் விரும்புகின்றனர் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால், பொம்மை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்குவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது என குறிப்பிட்டதாக கூறினார். தமிழகத்தில் பெம்மைகள் செய்யும் மையமாக தஞ்சாவூர் விளங்குகிறது என கூறியிருந்தார். கடந்த காலத்தை நினைவூட்டுவதும், எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொமமைகள். இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டு பொருட்கள் ஒற்றுமையை பறைசாற்றுகிறது.

விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்வி கொள்கையில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என கூறியிருந்தார். உள்நாட்டு விளையாட்டு பொருட்களை வாங்க ஊக்கவிக்க வேண்டும் என பேசினார். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஜேஇஇ – நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு குறித்து ஆலோசிக்க விரும்புகின்றனர். ஆனால், பிரதமர் பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார் என பதிவிட்டுள்ளார்.