சென்னை,

ளும் அதிமுக அரசு மீது பல்வேறு ஊழல் பட்டியல்களை கொண்ட புகார் மனுவை பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமனு ராமதாஸ் கொடுத்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

ழல் என்பது புற்றுநோய் ஆகும். அது ஜனநாயகத்தின் மீது குடிமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை சிதைக்கிறது. புதுமைகளை உருவாக்கும் திறனையும், படைப்புத் திறனையும் குறைக்கிறது. நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக செலவிட நிதி இல்லாமல் திணறும் நிலையில், வெளியிலிருந்து வரும் முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளையும் ஊழல் தடுக்கிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தலைமுறைகளின் திறமைகளை  ஊழல் வீணடிக்கிறது என்பது தான் நேர்மையான நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.

உலகம் முழுவதுமே ஊழல் ஒரு பெரும் தீமையாக பார்க்கப்படுகிறது. ஊழல் என்பது சமூகங்களை சீரழிக்கக்கூடிய, பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, சமூக, பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய,  ஜனநாயகத்தின் மாண்பையும், பொதுமக்களின் நலனையும் பாதிக்கக்கூடிய பிரச்சினையாகத் தான் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக மக்களிடையே கடுமையான வெறுப்பும், கோபமும் நிலவும் போதிலும், ஊழல்வாதி களுடன்  அரசுகளும் இணைந்து செயல்படுவதால், இந்தக் கொடுமையை சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழல் மட்டும் தான் நடைபெறுகிறது. ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கான லோக் அயுக்தா அமைப்பு 19 மாநிலங்களிலும், தில்லி யூனியன் பிரதேசத்திலும் அமைக்கப்பட்டி ருக்கிறது.  அதேபோல் பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் மத்திய அரசாலும், 19 மாநிலங்கள் மற்றும் தில்லி யூனியன் பிரதேசத்தாலும் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை, பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் இயற்றப்படவில்லை என்பதிலிருந்தே அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை ஏற்படுத்தவும் தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மேதகு ஆளுனர்  அறியலாம்.

ஊழலும், முறைகேடான நிர்வாகமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்து செயல்படுகின்றன. நல்லாட்சி நடைமுறைகளை கடைபிடிக்கும் மாநிலத்திலும், சமூகத்திலும் வாழ்வது அடிப்படை மனித உரிமை என அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மாநிலம் அச்சுறுத்தல் மற்றும் ஊழல் நிறைந்த நிர்வாக அமைப்பின் அடிப்படையில் நிர்வகிக்கப்படாமல், அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்யும் மிக முக்கியமான பணியை மாநில ஆளுனருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது.

திறமையான நிர்வாகத்தை ஏற்படுத்தி தொடரச் செய்வதற்கும், சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அரசு நிர்வாகத்தின் தூய்மை மிகவும் அவசியமாகும். அரசு நிர்வாகத்தில் தூய்மையை உறுதி செய்வதற்கான முக்கியத் தேவை ஊழலற்ற செயல்பாடுகள் ஆகும். வாழ்வதற்கான உரிமை, கண்ணியம் மற்றும் பிற முக்கிய மனித உரிமைகளும், மாண்புகளும் ஊழலற்ற ஆட்சியை பெறுவதற்கான உரிமையை சார்ந்தே உள்ளன.

2011-ஆம் ஆண்டில் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்தது.  இயற்கைவளக் கொள்ளை அதிகரித்தது. வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, அவருக்கு பதில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியிலும் இந்த ஊழல் தொடர்ந்தது. மேலும் அரசு நிர்வாகமும் முற்றிலுமாக முடங்கியது.  ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான  ஆட்சிகளில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வலியுறுத்தி  கடந்த 17.02.2015 அன்று அப்போதைய ஆளுனர் ரோசய்யா அவர்களிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 18 ஊழல் குற்றச்சாற்றுகள் அடங்கிய 209 பக்க புகார் மனு அளிக்கப்பட்டது.

மேற்கண்ட ஊழல் குற்றச்சாற்றுகளை நிரூபிக்கும் அளவுக்கு ஆளுனரிடம் ஆதாரங்கள் அளிக்கப்பட்டாலும் கூட அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. மற்றொரு புறம் 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று  அதிமுக அரசு பதவியேற்ற பிறகும் ஊழல் தொடர்கதையாகியிருக்கிறது. மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற சில மாதங்களில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு காலமான நிலையில், அவரைத்  தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆட்சியிலும் ஊழல் குற்றச்சாற்றுகள் எழுந்தன.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆட்சியில் முன்பை விட ஊழல்கள் அதிகரித்துள்ளன. அவை தொடர்பாக தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது செல்லுபடியாகக்கூடிய ஆதாரங்களுடன் கீழ்க்கண்ட ஊழல் குற்றச்சாற்றுக்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கிறது.

அ. இயற்கை வளக்கொள்ளை

குற்றச்சாற்று 1.  ரூ. 7.10 லட்சம் கோடி ஆற்று மணல் ஊழல்

தமிழ்நாட்டில்  ஆற்று மணல் ஊழல் சுற்றுச்சூழலை மட்டுமின்றி பொருளாதார வளத்தையும் அழிக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 48 மணல் குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டில் அவற்றின் மூலம் அரசுக்கு ரூ.86.33 கோடி மட்டும் தான் வருவாய் கிடைத்திருக்கிறது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். அதுமட்டுமின்றி மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்து வருகிறது. 2011-12ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது மணல் மூலம் கிடைத்த வருவாய் ரூ.188.03 கோடியாகும். 2012-13ஆம் ஆண்டில் இது ரூ.188 கோடியாக குறைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே ரூ.133.37 கோடி, ரூ.126.02 கோடி, ரூ.91.02 கோடி என்ற அளவில் சரிந்து 2016&17ஆம் ஆண்டில் ரூ.86.33 கோடியாக குறைந்துள்ளது. இதற்குக் காரணம் மணல் கொள்ளை தான்.

தமிழ்நாட்டில் ஆற்று மணல் விற்பனையை கடந்த 2003&04 ஆண்டு முதல் அரசே ஏற்றுக்கொண்ட தாக அறிவிக்கப்பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமான சேகர் ரெட்டி, ஆறுமுக சாமி, கே.சி.பழனிச்சாமி போன்றவர்கள் தான் மணல் விற்பனையில் கோலோச்சுகின்ற னர்.  விதிகளுக்கு மாறாக ஆறுகளில் 50 & 60  அடி ஆழத்திற்கு மணலை வெட்டி எடுக்கின்றனர். உண்மையில் விற்கப்படும் மணலில் 5 விழுக்காடு மட்டுமே கணக்கில் காட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 8300 சரக்குந்துகளுக்கு மட்டுமே மணல் விற்கப்படுவதாக வும், ஒரு சரக்குந்து மணலுக்கு  ரூ.800 மட்டுமே விலையாக வசூலிக்கப்படுவதாகவும் அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு தெரிவிக்கிறது.

ஆனால், தமிழகத்தில் மொத்தம் ஒரு லட்சம் மணல் சரக்குந்துகள் இயங்குகின்றன. ஒரு நாளைக்கு  ஒரு சரக்குந்துக்கு ஒரு முறை மணல் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட ஒரு லட்சம் லோடு சரக்குந்து வழங்கப்படுகிறது. ஒரு சரக்குந்தில் 2 யூனிட் மணல் மட்டுமே ஏற்றப்பட வேண்டும்  என்பது தான் விதி என்றாலும் சாதாரண சரக்குந்துகளில் 4 யூனிட்டுகள் வரை ஏற்றப்படுகின்றன.  குறைந்தபட்சம் மதிப்பீடாக ஒரு சரக்குந்தில் 3 யூனிட் ஏற்றப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கூட ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் யூனிட் மணல் விற்பனை செய்யப்படுவதாகக் கொள்ளலாம்.

ஒரு சரக்குந்து ஆற்று மணலின் விலை ரூ.800 என அரசு நிர்ணயித்திருந்தாலும் உண்மையில் விற்பனை செய்யப்படுவது இன்னும் அதிக விலைக்காகும். 2 யூனிட் ஆற்று மணல் சென்னையில் ரூ.36 ஆயிரத்திற்கும், கர்நாடகத்தில் ரூ.50 ஆயிரத்திற்கும், கேரளத்தில் ரூ.55 ஆயிரத்திற்கும் விற்கப்படுகிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு காஞ்சிபுரம்  மாவட்டம் பழைய சீவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை பறிமுதல் செய்த மாவட்ட நிர்வாகம் 27.11.2013 அன்று பொது ஏலம் மூலம் அந்த மணலை விற்பனை செய்தது. அப்போது ஒரு யூனிட் மணல் ரூ.6100 என்ற தொகைக்கு ஏலம் போனது. இதையே அளவீடாகக் கொண்டால் ஒரு நாளைக்கு மணல் விற்பனை மூலமாக மட்டும் அரசுக்கு ரூ.183 கோடி வருமானம் கிடைக்க வேண்டும்.

ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மணல் எடுக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் ரூ.54,900 கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டும். கடந்த 13 ஆண்டுகளில் ரூ.7,13,700 கோடி மணல் விற்பனை மூலம் வருமானம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 13 ஆண்டுகளில் அரசுக்கு கிடைத்த வருமானம் ரூ.1700 கோடிக்கும் குறைவு தான். இதற்குக் காரணம் ஊழல் தான். தமிழகத்தின் பொருளாதாரத்தை சிதைத்து வரும் ஆற்று மணல் கொள்ளை மற்றும் ஊழல் பற்றி விசாரனைக்கு ஆணையிட வேண்டும்.

குற்றச்சாற்று 2. 2ஜி, நிலக்கரி ஊழல்களை விஞ்சும் தாது மணல் ஊழல்

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நடைபெற்ற தாது மணல் ஊழல் ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், ரூ.1.86 லட்சம் கோடி நிலக்கரி ஊழல் ஆகியவற்றை விட அதிகம் என்பது மிகைப்படுத்தப் பட்ட ஒன்றல்ல. இது தாது மணல் ஊழல் குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தால் அமிகஸ் க்யூரியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞர் திரு.வி. சுரேஷ் தெரிவித்த கருத்து ஆகும்.

இந்தியா முழுவதும் கடந்த 2002 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்தம்            2.1 மில்லியன் டன் எடையுள்ள மோனோசைட் அல்லது 2.35 லட்சம் டன் தோரியத்தை கடற்கரைகளில் இருந்து தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்திருக்கின்றன. இதற்கான ஆதாரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலேயே உள்ளன.

இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணு தாதுக்களை கண்டுபிடித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான இயக்குநரகத்தின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘இந்திய கடலோரப் பகுதிகளில் 10.7 மில்லியன் டன் அளவுக்கு மோனோசைட் தாது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இதே இயக்குநரகம் தாக்கல் செய்த அறிக்கையில், இந்திய கடலோரப் பகுதிகளில் 12.8 மில்லியன் டன் மோனோசைட் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 2.1 மில்லியன் டன் மோனோ சைட் அல்லது 2,35,000 டன் தோரியம் வெட்டியெடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு அளவிட முடியாத அளவுக்கு அதிகம் என்ற போதிலும், மிகக்குறைவாக வைத்துக் கொண்டாலும் ரூ.60 லட்சம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த ரூ.65 லட்சம் கோடி தாது மணல் கொள்ளையில் 75 விழுக்காடு தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும், அதையொட்டியக் கேரள கடற்கரையிலும் தான் நடந்ததாக மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் அனைத்தையும் கடந்த முறை ஆளுனரிடம் அளித்த அறிக்கையில் விளக்கியிருக்கிறோம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தலைத் தொடர்ந்து தாது மணல் கொள்ளை குறித்து இ.ஆ.ப. அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு தாக்கல் செய்த இரு விசாரணை அறிக்கைகளும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய 3 மாவட்டங்களில் 575 ஏக்கரில் 90 லட்சம் டன் தாது மணல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக அக்குழு அறிக்கைகளில் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தாது மணல் ஊழல் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக அமைக்கப் பட்ட மூத்த வழக்குரைஞர் திரு.வி.சுரேஷ் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தாது மணல் கொள்ளை குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 2007 முதல் 2016 வரையிலான பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 3.94 கோடி டன் தாது மணலை கொள்ளையடித்திருப்பதாக வழக்குறைஞர் திரு.வி.சுரேஷ் புள்ளி விவரங்களுடன் விளக்கியிருக்கிறார்.

2007&16 காலத்தில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் 99 லட்சம் டன் தாது மணலை வெட்டி எடுத்திருப்பதாக  வி.வி. மினரல்ஸ் நிறுவனம் இந்திய அணுசக்தி தாதுக்கள் இயக்குனரகத்திடம் (கிtஷீனீவீநீ விவீஸீமீக்ஷீணீறீs ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீணீtமீ -கிவிஞி) தகவல் தெரிவித்துள்ளது. கச்சா தாதுமணலில் 0.05% மட்டுமே மோனசைட் தாது இருக்கும் என்பதால் 99 லட்சம் டன் தாது மணலைக் கொண்டு 5876.60 டன் மோனசைட் தாதுவை உற்பத்தி செய்ய முடியும் என்று இந்திய அணுசக்தி தாதுக்கள் இயக்குனரகம் மதிப்பிட்டிருக்கிறது. ஆனால், வி.வி. மினரல்ஸ் தாக்கல் செய்த அறிக்கையில் தங்களிடம் 80,725.05  டன் மோனசைட் படிமம்  இருப்பதாக தெரிவிக்கப்பட்டி ருக்கிறது.

மோனசைட் படிமத்தில் 29% மோனசைட் இருப்பதால் இந்த படிமத்தைக் கொண்டு 23,461.70 டன் மோனசைட் தாதுவை தயாரிக்க முடியும். 23,461.70 மோனசைட் தாது அல்லது 80,725.05 டன்  மோனசைட் படிமத்தை தயாரிக்க 4.69 கோடி முதல் 4.93 கோடி டன் தாது மணல் தேவைப்படும். ஆனால், தாது மணல் படுகைகளில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ஒட்டுமொத்த தாது மணலின் அளவு 1.51 கோடி டன் மட்டுமே என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறாக கடற்கரைப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்பட்ட தாதுமணலின் அளவு குறித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப்பின்  முரணாக இருப்பதாக வழக்குரைஞர் சுரேஷ் அவர்கள் உயர்நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் வி.வி. மினரல்ஸ் மட்டும் 3.94 கோடி டன் தாது மணலை சட்டவிரோதமாக கொள்ளையடித்திருக்கிறது எனக் கருதலாம். தமிழகத்தில் மொத்தம் 62 தாது மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிள்ளது. இதில் விவி மினரல்ஸ் நிறுவனம் மட்டும் 34 குவாரி உரிமங்களைப் பெற்றுள்ளது. இதே விகிதத்தில் மற்ற நிறுவனங்க ளும் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாகக் கொண்டால் கடந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 7.29 கோடி டன் தாது மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி மதிப்பிடுகிறது. தமிழக அரசின் ஒத்துழைப்பின்றி இவ்வளவு பெரிய தாதுமணல் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தியாவை உலுக்கிய 2ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் ஆகியவற்றை மிஞ்சும் வகையில் தாது மணல் கொள்ளை நடந்திருப்பதாக உயர்நீதிமன்றம் நியமித்த மூத்த வழக்கறிஞர் கூறியிருப்பதால் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குற்றச்சாற்று 3. தமிழக அரசின் தடையையும் மீறி தொடர்ந்த தாது மணல் கொள்ளை

தமிழ்நாட்டில் நடைபெற்ற தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தாதுமணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்துவதற்காக  அரசுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் தலைமையில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ககன்தீப்சிங் பேடி குழு அதன் அறிக்கையை 17.09.2013 அன்று அப்போதைய முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து அன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள தாது மணல் குவாரிகளில் தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி தாது மணல் கொள்ளையடிப்பதும், ஏற்றுமதி செய்வதும் இன்று வரை தொடர்கிறது.

தமிழ்நாட்டில் தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட நாளில் இருந்து 30.5.2014 வரையிலான 9 மாதங்களில் வி.வி. மினரல்-ஸ் நிறுவனம் 4.45 லட்சம் டன் எடையுள்ள தாதுக்களை ஏற்றுமதி செய்ய தமிழக அரசு அனுமதித்திருப்பதாகவும், இந்த வகையில் மட்டும் தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து, விசாரிக்க ஆணையிட வேண்டும் என்று கோரி ஜி.விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்ய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நிலையில், அவர் இந்த வழக்கிலிருந்து விலகி விட்டார். ஆனாலும் சென்னை உயர்நீதிமன்றமே இவ்வழக்கை அதன் நேரடிப்பார்வையில் விசாரித்து வருகிறது.

தடை விதிக்கப்பட்ட பிறகும் தொடரும் சட்டவிரோத  தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க பல்துறை அதிகாரிகள் குழுவை அமைக்க உயர்நீதிமன்றம் 11.01.2017 அன்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதைத் தொடர்ந்து 25.03.2017 அன்று தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (டிட்கோ) தலைவர் சத்யபிரதா சாஹூ தலைமையில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இந்த சிறப்புக் குழு சோதனை நடத்தி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இக்குழு ஆய்வையும், விசாரணையையும் நிறைவு செய்துள்ள நிலையில், தாது மணல் நிறுவனங்கள் அவற்றின் கிடங்குகளில் 2 கோடி டன் தாதுமணலை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறது. இதுகுறித்த அறிக்கையை சத்யபிரதா சாகு தலைமையிலான குழு வெகுவிரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

தாது மணல் நிறுவனங்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ள 2 கோடி டன் தாதுமணலின் சந்தை மதிப்பு குறைந்தது ரூ. 5 லட்சம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. தமிழக ஆட்சியாளர்களின் ஒத்துழைப்புடன் இக்கொள்ளை நடைபெற்றிருக்கலாம் என்பதால் இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

குற்றச்சாற்று 4. தாது மணல் கொள்ளையால் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

அணுகுண்டு தயாரிப்பதற்கான தோரியம் தாதுவை தயாரிக்கப் பயன்படும் மோனசைட் கலந்த தாது மணலை வெட்டி எடுப்பதற்கு உரிமம் வழங்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றாலும்,  அந்த தாதுவை வெட்டி எடுப்பதற்கான உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு வழங்கியிருப்பது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

தாது மணல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், 1998 ஆம் ஆண்டு வரை இதை தோண்டியெடுக்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. தாது மணலை வெட்டியெடுக்கும் உரிமை இந்திய அரசுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டு விதிகள் திருத்தப்பட்டு, கார்னெட், இல்மனைட், ரூட்டைல் ஆகியவற்றை கடுமையான விதிகளுக்கு உட்பட்டு தனியார் நிறுவனங்களும் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்படடது. எனினும், மோனோசைட் தொடர்ந்து தடை செய்யப்பட்ட தாதுவாகவே இருந்து வந்தது.

மோனோசைட் தாதுவை கையாளவேண்டுமானால், இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திடமிருந்து உரிமம்  பெறவேண்டும் என்று 1962 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெட்டியெடுக்கப்பட்ட தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோனோசைட் தாது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஹைதராபாத்தில் உள்ள அணு தாது வாரியத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும். 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்படி, தாதுமணலை வெட்டியெடுப்பதற்கான உரிமங்களை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது; மாநில அரசுக்கு இல்லை. ஆனால், இந்தச் சட்டங்களை மதிக்காமல்,  மோனோசைட் கலந்த தாது மணலை வெட்டியெடுப்பதற்கான 62 உரிமங்களை தனியார் தாதுமணல் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத்துறை வழங்கியுள்ளது.

மோனசைட் தாதுமணலை தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது இந்தியப் பாதுகாப்புக்கு செய்யும் துரோகம் ஆகும். இத்தகைய ஏற்றுமதியில் ஈடுபடும் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கின்றனவா? என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கடந்த 20 ஆண்டுகளாகவே இத்தகைய மோனசைட் தாது மணல் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவதால் அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ம.க. கோருகிறது.

குற்றச்சாற்று 5. கண்டுகொள்ளப்படாத கிரானைட் ஊழல்

தமிழ்நாட்டில் மதுரை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற கிரானைட் கொள்ளையின் மதிப்பு ரூ.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பதால் அதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று 17.02.2015 அன்று அப்போதைய மேதகு ஆளுனர் ரோசய்யா அவர்களிடம் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனுவில் பாட்டாளி மக்கள் கட்சி கோரியிருந்தது.

அப்போது கிரானைட் ஊழல் குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டிருந்த இ.ஆ.ப. அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக்குழு  03.12.2014 அன்று தான் மதுரையில் விசாரணையைத் தொடங்கியது. சுமார் ஓராண்டு விசாரணைக்குப் பிறகு சகாயம் குழுவின் விசாரணை அறிக்கை 23.11.2015 சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு தான் கிரானைட் கொள்ளை குறித்த பல தகவல்கள் அதிகாரப்பூர்வமாக  வெளிவந்துள்ளன. சகாயம் குழு அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும் ஊடகங்களின் மூலம் அந்த அறிக்கையின் முக்கியப் பகுதிகளை பா.ம.க. அறிந்தது.

கிரானைட் கொள்ளையடிப்பதற்காக மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களை  பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் அதன் உரிமையாளர்களை மிரட்டி வாங்கியிருக்கிறது.  இதற்காக நில ஆவணங்களில் பல மோசடிகளை பி.ஆர்.பி. நிறுவனம் செய்துள்ளது. இது 1961&ஆம் ஆண்டின் தமிழ்நாடு நிலச் சீர்திருத்தச் (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்) சட்டத்தை மீறிய குற்றமாகும். ஆனாலும் இதுதொடர்பாக அந்நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்தளவுக்கு அந்த நிறுவனத்தின் கிரானைட் கொள்ளைக்கு தமிழக அரசு அதிகாரிகள் ஒத்துழைத்துள்ளனர் என்று  சகாயம் குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் தனியார் நிறுவனங்களின் கிரானைட் கொள்ளையால் ரூ.62,890.91 கோடி, அரசுக்கு சொந்தமான டாமின் நிறுவனத்தின் முறைகேடுகளால் ரூ.5507.53 கோடி, தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதம் ரூ.34,304.13 கோடி, டாமின் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதம் ரூ.9978.99 கோடி என மொத்தம் ரூ.1,12,681.56 கோடி  வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சகாயம் குழு மதிப்பிட்டிருக்கிறது. அதேநேரத்தில் இது உத்தேச மதிப்பீடு தான் என்றும், துல்லியமான மதிப்பீடு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சகாயம் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

‘‘கிரானைட் கொள்ளைக்காக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அவை அழிக்கப் பட்டுள்ளன. இவற்றைத் தடுக்கும் அளவுக்கு தமிழக அரசின் பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவில்லை. தவறு செய்த கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இத்துறைகளின் அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதுவே கிரானைட் கொள்ளையர்களுக்கு மேலும், மேலும் துணிச்சலைக் கொடுத்து இன்னும் அதிக தவறுகளை செய்வதற்கு ஊக்கமளித்தது. பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட பி.ஆர்.பி. நிறுவனத்தின் உரிமையாளரான பி.ஆர். பழனிச்சாமியால், அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல், இவ்வளவு பெரிய  கிரானைட் சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்க முடியாது. தமிழகத்தின் ஆட்சியாளர்களாவது  கிரானைட்  கொள்ளையை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை.  ஒட்டு மொத்த அரசு நிர்வாகமும் செயலிழந்து விட்டது தான் இதற்கு காரணமாகும். கிரானைட் கொள்ளைக்கு அரசியல் செல்வாக்கும் காரணமாகும்.

கிரானைட் கொள்ளைகள் குறித்து சி.பி.ஐ.யின் பல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரியான சகாயம் அவரது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளார். மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து மட்டும் தான் சகாயம் குழு விசாரணை நடத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதைவிட 10 மடங்குக்கும் கூடுதலான அளவுக்கு கிரானைட் கொள்ளை நடைபெற்றிருக்கிறது. திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும்  கிரானைட் கொள்ளை பெருமளவில் நடைபெற்றுள்ளது. இந்த கொள்ளைகள் குறித்து தமிழகம் தழுவிய அளவில் விரிவான விசாரணை நடத்தப்பட மேதகு ஆளுனர் அவர்கள் ஆணையிட வேண்டுகிறோம்.

ஆ. உயர்கல்வித்துறை ஊழல்கள்

குற்றச்சாற்று 6. துணைவேந்தர், ஆசிரியர் நியமன ஊழல்

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி குறித்தும், சமூக, பொருளாதார, அறிவியல் வளர்ச்சி குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய பல்கலைக்கழகங்கள் ஊழல் வளர்ச்சிக்கு உதாரணங்களாக மாறி வருகின்றன.   ஆட்சியாளர்கள் தலைவணங்கும் அளவுக்கு கல்வியாளர்களாக திகழ்ந்த ஆற்காடு லட்சுமணசாமி  முதலியார், நெ.து. சுந்தரவடிவேலு உள்ளிட்டோர் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக பணியாற்றிய நிலை மாறி, கல்வி குறித்தும், நிர்வாகம் குறித்தும் எதுவும் அறியாதவர்கள் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தான் பின்னாளில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒருவரை நேரில் சந்தித்து அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்து அவர்கள் வகிக்கும் பொறுப்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தினர். இத்தனைக்கும் காரணம் ஊழல் மட்டுமே.

கடந்த 2015&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய ஆளுனரிடம் புகார் மனு கொடுத்த பிறகு இன்று வரை சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம்,  வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகிய 10 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களின் நியமனத்திற்காக குறைந்தபட்சம் ரூ.3 கோடி முதல் ரூ.20 கோடி வரை கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

இவர்களில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பி.பி. செல்லத்துரை அப்பதவிக்கு தகுதியற்றவர் என்றும், ஆட்சியாளர்கள் சார்பில் தேர்வுக்குழு அமைப்பாளர் முருகதாஸ் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவரது பெயரை பரிந்துரைத்ததாக தேர்வுக்குழு உறுப்பினர்களான  ஹரிஷ்மேத்தா, இராமகிருஷ்ணன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதை மேதகு ஆளுனர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். அதேபோல், மருத்துவத் துறையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகளில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் மருத்துவப் பல்கலைத் துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டிலும் சோதனை நடத்தியதுடன், நேரில் அழைத்தும் விசாரணை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் மட்டும் கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு நிலைகளில் சுமார் 800 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.  உதவிப் பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம், இணை பேராசிரியர் பணிக்கு ரூ.40 லட்சம், பேராசிரியர் பணிக்கு ரூ.55 லட்சம் வீதம் கையூட்டு பெறப்பட்டிருப்பதாகவும், இவ்வகையில் மட்டும் ரூ.320 கோடி ஊழல் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பல்கலைக்கழக துணைவேந்தர்கள், ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

குற்றச்சாற்று 7. பல்கலைக்கழக கட்டுமான ஊழல்

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 13 பல்கலைக்கழகங்களில் கடந்த இரு ஆண்டுகளில் ரூ.400 கோடி மதிப்புள்ள கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2015&16 ஆம் ஆண்டில் ரூ.91.72 கோடிக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  இந்தக் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேர்வுக்கான எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்முதல் செய்வதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல்கள் நடந்துள்ளன. பல்கலைக் கழகங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்கள் பற்றி விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

இ. பள்ளிக்கல்வித்துறை ஊழல்கள்

குற்றச்சாற்று 8. தனியார் பள்ளிகள் முறைகேடு ஊழல்

உயர்கல்வித்துறைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் பள்ளிக் கல்வித்துறையிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன. தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.10 லட்சம் வரையிலும், அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ.4 லட்சமும் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள்  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கான ஆட்சேபமின்மை சான்றிதழ் வழங்க ரூ.40 லட்சம் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் இவ்வாறு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாறியுள்ளன. அனைத்து பள்ளிகளிடமிருந்தும் கையூட்டு பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் வரலாறு காணாத வகையில் கட்டணக் கொள்ளையில்  ஈடுபட்டன. ஒவ்வொரு பள்ளிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் வசூலித்தன. அதற்கு வசதியாக தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான அரசு குழுவின் தலைவராக இருந்த நீதிபதி சிங்காரவேலு கடந்த 2015-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், 15 மாதங்களுக்குப் பிறகு 22.03.2017 அன்று – தான் கட்டண நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக நீதிபதி டி.வி. மாசிலாமணி நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் கட்டண நிர்ணயக் குழு புதியக் கட்டணத்தை நிர்ணயிக்காததால் கடந்த இரு ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் எல்லையில்லாமல் கட்டணக் கொள்ளையை நடத்தின. இதற்கு வழி வகுத்துக் கொடுத்ததற்காகவும், கண்டுகொள்ளாமல் இருந்ததற்காகவும் ஆட்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கபட்டதாக கூறப்படும் குற்றச்சாற்று குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

குற்றச்சாற்று 9. பணி நியமன, பணியிடமாற்ற ஊழல்கள்

உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு பேராசியர்களை நியமிப்பது போன்று அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியாது என்பதாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே தகுதி மற்றும் போட்டித்தேர்வு நடத்தி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடக்க வாய்ப்புகள் இல்லை. அதேநேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை காலியாகும் போது, அதை தகுதியுடையவர்களைக் கொண்டு நிரப்புவதற்காக பள்ளி நிர்வாகங்களிடமிருந்து ஒரு பணியிடத்திற்கு ரூ.20 லட்சம் வரை கையூட்டாக பெறப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் இவ்வாறு கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது.

ஆசிரியர்கள் இடமாறுதலுக்காக கவுன்சலிங் நடத்தப்படும் போது அதில் முறைகேடு நடப்பதில்லை.  மாறாக நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்படும் போது ஒரு இடமாற்றத்திற்காக ரூ.5 லட்சம் வரை கையூட்டு வாங்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளில் குறைந்தது 2000 பேருக்கு நிர்வாக ஒதுக்கீடில் இடமாறுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் ஊழல்கள் நடந்துள்ளன. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு மேதகு ஆளுனர் அவர்கள் ஆணையிட வேண்டும்.

ஈ. மின்சாரத்துறை ஊழல்கள்

குற்றச்சாற்று 10. தனியார் மின்சாரக் கொள்முதல் ஊழலால் ரூ.52,000 கோடி இழப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனல் மின்சாரமும், சூரிய ஒளி மின்சாரமும் கொள்முதல் செய்வதில்  மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. 2014&ஆம் ஆண்டு வரை மின்சாரம் கொள்முதல் செய்வதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து 17.02.2015 அன்று தமிழக ஆளுனரிடம் அளித்த மனுவில் பா.ம.க. விரிவாக குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மின்சார வாரியத்திற்கு 2015&ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளுக்கு 3330 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக 11 நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி நடைமுறையில் இந்த 11 நிறுவனங்களும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.4.91 முதல் ரூ.9.85 வரை விலை நிர்ணயித்திருக்கின்றன. அதில் குறைந்த அளவான ரூ.4.91 என்ற விலைக்கு மின்சாரம் வழங்க மற்ற நிறுவனங்களும் ஒப்புக்கொண்டதால் அனைத்து நிறுவனங்களிடமிருந்து 3330 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் ஏதெனா எனர்ஜி வெஞ்சர் பிரைவேட் லிமிடெட் (கிtலீமீஸீணீ ணிஸீமீக்ஷீரீஹ் க்ஷிமீஸீtuக்ஷீமீ றிக்ஷிஜி லிtபீ) நிறுவனம் ஒரு யூனிட் ரூ.3.32 என்ற விலைக்கும், ஆந்திரத்தில் பி.டி.சி இந்தியா நிறுவனம் (முந்தைய பெயர் றிஷீஷ்மீக்ஷீ ஜிக்ஷீணீபீவீஸீரீ சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ) ரூ.3.44 என்ற விலைக்கும் மின்சாரம் வழங்குகிறது. இதைவிட யூனிட்டுக்கு சராசரியாக ரூ.1.50 வரை கூடுதலாக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால்  தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 15 ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும்.

அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மொத்தம் 947 மெகாவாட் சூரியஒளி மின்சாரம் வாங்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. விதிகளின்படி ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 0.05%  அளவுக்கு மட்டுமே புதுப்பிக்கவல்ல மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டும். அதன்படி 2016&ஆம் ஆண்டு நிலவரப்படி 20 மெகாவாட் மின்சாரம் மட்டுமே சூரியஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய  வேண்டும். பின்னர், இந்த அளவை தமிழ்நாடு மின்சார வாரியம் தன்னிச்சையாக 200 மெகாவாட்டாக (0.50%) உயர்த்தியது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் உட்பட 947 மெகாவாட் மின்சாரம் வாங்கியது விதிகளை மீறிய முறைகேடான செயலாகும்.

அதுமட்டுமின்றி, அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு  ரூ.7.01 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 11.09.2015&ஆம் தேதிக்குள் இந்த நிறுவனங்கள் மின்சார உற்பத்தியை தொடங்கினால் தான் இந்த விலை வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டுக்கான விலையான யூனிட்டுக்கு ரூ.5.86 வீதம் மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஆனால், யூனிட்டுக்கு ரூ.1.15 வீதம் 25 ஆண்டுகளுக்கு கூடுதல் விலை வழங்கப்படுவதால் ரூ.7000 கோடி இழப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக அரசுக்கு ரூ.52,000 கோடி இழப்பை ஏற்படுத்தக்கூடிய மின்சாரக் கொள்முதல் ஊழல் குறித்து விரிவான விசாரணைக்கு ஆளுனர் அவர்கள் ஆணையிட வேண்டும்.

குற்றச்சாற்று 11. மின்வாரியப் பொறியாளர்கள் தேர்வு முறைகேடு ஊழல்

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 375 உதவி பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு 31.01.2017 அன்று அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டன. அத்தேர்வு மிகவும் நேர்மையான முறையில் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கான எழுத்துத் தேர்வு 13.03.2017 முதல் 18.03.2017 வரை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள விஜய்பார்க் விடுதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும், நேர்காணலை மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.

ஆனால், அதை ஏற்காத மின்சார வாரியம் நேர்காணலை சென்னை வண்டலூரில் உள்ள கல்யாண் ஹோம்டெல் என்ற நட்சத்திர விடுதியில் நடத்தியது. இந்த நேர்காணலில் பண பேரம் நடைபெற்றதாகவும், பணம் கொடுத்தவர்களுக்கு நேர்காணலில் அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு பணி வழங்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றஞ்சாற்றியிருக்கின்றனர். இந்தக் குற்றச்சாற்று குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கு தமிழக ஆளுனராகிய தாங்கள் ஆணையிட வேண்டும் என்று கோருகிறோம்.

உ. பிற ஊழல்கள்

குற்றச்சாற்று 12. ரூ.303 கோடி மருத்துவக் காப்பீட்டுத் திட்ட ஊழல்

தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியத்தை உயர்த்துவதில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி வந்தது. ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு குடும்பத்துக்கு ஆண்டு பிரிமியமாக ரூ.437 வீதம் ரூ.505 கோடி மட்டுமே அரசால் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டு திசம்பர் மாதம் இத்திட்டத்தை நீட்டிப்பதற்காக ஒப்பந்தப்புள்ளிகள்  கோரப்பட்டபோது குடும்பத்திற்கான பிரிமியத்தை ரூ.1000 ஆக உயர்த்தி வழங்க மாநில ஊரக சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் தாரேஷ் அகமதுக்கு அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழுத்தம் கொடுத்தார். ஆனால், அதை திட்ட இயக்குனர் ஏற்றுக் கொள்ளாத நிலையில், அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. இறுதியில் ஒரு குடும்பத்திற்கான பிரிமியம் 699 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கும் திட்ட இயக்குனர் ஒப்புக்கொள்ளாத நிலையில் அவருக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அழுத்தம் கொடுத்து தான் பிரிமியத் தொகை இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டது.

அதன்படி முதலமைச்சரின் விரிவானக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரிமியம் ரூ.808 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் 11.01.2017 அன்று கையெழுத்திடப்பட்டது. அதுமட்டுமின்றி வழக்கமாக இந்தத் தொகை படிப்படியாகத் தான் வழங்கப்படும் எனும் நிலையில் முழுத் தொகையையும் ஒரே தவணையில் வழங்கும்படி திட்ட இயக்குனருக்கு முதலமைச்சர் பன்னீர்செல்வமே நெருக்கடி கொடுத்துள்ளார்.

இத்திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் நேரடியாக நடத்துவதில்லை. பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாகத் தான் நடத்துகிறது. அந்த நிறுவனங்களிடமிருந்து அப்போதைய முதலமைச்சர் தரப்பில் ரூ.240 கோடி கையூட்டு கோரப்பட்டதாகவும், அதற்காகவே பிரிமியம் உயர்த்தி வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பிரிமியத் தொகையை தேவையில்லாமல் உயர்த்தி வழங்கியதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.303 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் எனக் கோருகிறோம்.

குற்றச்சாற்று 13. குட்கா ஊழல்

தமிழ்நாட்டில் குட்கா மற்றும் போதைப் பாக்குகளுக்கு 2013&ஆம் ஆண்டு மே மாதம் தடை விதிக்கப்பட்ட  போதிலும் அதன் உற்பத்தியும், விற்பனையும் எந்த தடையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போதைப் பாக்கு விற்பனையை கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சரும், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கையூட்டு வாங்கிக் கொண்டு குட்கா விற்பனையை அனுமதித்தது தான்.

சென்னை செங்குன்றத்தில் சட்டவிரோத குட்கா நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2016&ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8&ஆம் தேதி எம்.டி.எம் என்ற போதைப்பாக்கு நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. அதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் இரு காவல்துறை உயரதிகாரிகள், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு ரூ.39.91 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதற்கான குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கான ஆதாரங்களை தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் இராமமோகனராவ்,  காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார் ஆகியோரிடம் அளித்த வருமானவரித்துறை அதிகாரிகள், அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், இதுவரை யார் மீதும் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு, வருமானவரித்துறை அதிகாரிகள்  கொடுத்த ஆவணங்கள் மாயமாகி விட்டதாகக் கூறி அமைச்சரையும், அதிகாரிகளையும் காப்பாற்ற முயல்கிறது. இதுகுறித்து உயர்நீதிமன்ற ஆணைப்படி கையூட்டுத் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு விசாரணை நடத்தி வரும் போதிலும், இந்த ஊழலில் அமைச்சர் முதல் காவல் தலைமை இயக்குனர்கள் வரை சம்பந்தப்பட்டிருப்பதால் உண்மை வெளிவரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, இதுபற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்க ஆணையிட வேண்டும்.

குற்றச்சாற்று 14. வாக்கி&டாக்கி கொள்முதல் ஊழல்

தமிழகக் காவல்துறைக்கு வாக்கி&டாக்கி எனப்படும் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதில் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. 2017&-18 ஆம் ஆண்டில் காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்தின்படி வாக்கி&டாக்கி வாங்க ரூ.47.56 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதைக் கொண்டு 10 ஆயிரம் வாக்கி-&டாக்கிகள் வாங்கப்பட வேண்டும். ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மாறாக, வெறும் 4000 வாக்கி&-டாக்கிகளை வாங்க மொத்தம் ரூ.83.45 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட தொகைக்கும் கூடுதலாக ஒப்பந்தம் வழங்கியது  விதிமீறலாகும்.

அதுமட்டுமின்றி இதில் பெருமளவில் ஊழலும் நடைபெற்றுள்ளது. அரசு ஒதுக்கிய ரூ.47.56 கோடியில் 10000 வாக்கி டாக்கிகள் அதாவது ஒரு வாக்கி-டாக்கி ரூ.47,560 என்ற விலையில் வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதைவிட 4 மடங்குக்கும் அதிக விலை கொடுத்து, அதாவது ஒரு வாக்கி&டாக்கி ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. இதேவிலையில் தமிழக காவல்துறையினருக்கு தேவையான வாக்கி&டாக்கிகள் வாங்கப்பட்டால் அரசுக்கு ரூ.161.07 கோடி இழப்பு ஏற்படக்கூடும்.

வாக்கி&டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த நடைமுறைகளும் இதில் கடைபிடிக்கப்படவில்லை. வாக்கி-&டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது. ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரினால் தான் அவற்றுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிதாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக உரிய தகுதிகளைப் பெறாத அந்த நிறுவனத்திற்கு காவல்துறை ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ஊழல், விதிமீறல் ஆகியவற்றையெல்லாம் கடந்து இதில் தேசப்பாதுகாப்பும் சம்பந்தப்பட்டிருப்பதால் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

குற்றச்சாற்று 15. பொதுப்பணித்துறை தார் கொள்முதல் ஊழல்

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைப்பதற்காக தாருக்கு சந்தை விலையை விட அதிக விலை கொடுத்ததன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4000 கி.மீ நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் டன் தார் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் கடந்த 2014-ஆம் ஆண்டு தாரின் விலை டன்னுக்கு ரூ.41,360 என்ற உச்சத்தை அடைந்தது. இதை அடிப்படையாக வைத்து அந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கான தொகை தீர்மானிக்கப்படது. ஆனால், ஒரு டன் தாரின் விலை 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.30,260 ஆகவும், 2016-ஆம் ஆண்டில் ரூ.23,146 ஆகவும் குறைந்தது. விதிகளின்படி 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களுக்கான தொகை அப்போது நிலவிய தாரின் விலையை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக 2014-ஆம் ஆண்டு விலையை அடிப்படையாகக் கொண்டே ஒப்பந்தத்தொகை தீர்மானிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு  வழங்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, 2014-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில்  நிறைவேற்றப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தத் தொகையும் குறைக்கப்பட்ட தாரின் விலையை  அடிப்படையாகக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டு, கூடுதலாக வழங்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட வேண்டும். ஆனால், இந்த விதிகள் எதையுமே நெடுஞ்சாலைத்துறை பின்பற்றவில்லை. இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு மட்டும் ரூ.1000 கோடி ஆகும். இந்தத் துறை கடந்த 2011&ஆம் ஆண்டு முதல் ஆறரை ஆண்டுகளாக, தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இந்த ஊழலை மூடி மறைக்க தமிழக அரசு  முயல்கிறது. இந்த ஊழல் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கும், இதில் சம்பந்தப்பட்ட  குற்றவாளிகளை தண்டிக்கவும் தார் கொள்முதல் ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.