அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது பாமக, தேமுதிக….. ஓர் ஆய்வு

சென்னை:

ரசியல் களத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, நடிகர் விஜயகாந்தின்  தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை இழந்ததுள்ளது.

எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது இடஒதுக்கீடு பிரச்சினை காரணமாக பல்வேறு வன்முறை போராட்டங்களை கையில் எடுத்து வன்னிய மக்களின் பேராதரவுடன் களம்கண்ட பாமக, குடும்ப ஆதிக்கத்தால் சிதறுண்ட நிலையில்,  இன்று தனது அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

அதுபோல, அதிமுகவுக்கு எதிராக, குறிப்பாக ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கிய விஜயகாந்த் கட்சியும், அவரது மனைவி மற்றும் மைத்துனரின்  அரசியல் ஈடுபாடு காரணமாக, எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இன்று  தனது அங்கீகாரத்தை இழந்த பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

இந்த இரு கட்சிகளும் குறிப்பிட்ட சதவிகிதம்கூட வாக்குகள் பெறாத நிலையில், அதன் அரசியல் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே வைகோவின் மதிமுக தனது அங்கீகாரத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே அங்கீ கரிக்கப்பட்ட கட்சிகளாக உள்ளது.

ஒரு தேசிய கட்சி தனது அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2% வாக்குகள் அதாவது 11 எம்.பிக்களை கொண்டிருக்க வேண்டும்.

அதுவே மாநிலக் கட்சிகள் என்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளோ அல்லது 2 சட்டமன்ற உறுப்பினர்களையோ கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லை என்றால் இந்திய தேர்தல் ஆணையம் அந்தக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் என்பது தேர்தல் விதி.

இந்த நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால்  பாமக மற்றும் தேமுதிகவின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக பாமகவின் மாம்பழம் சின்னம் சுயேச்சை சின்னமாக மாறிவிட்டது. அதுபோல தேமுதிகவின் முரசு சின்னமும் இனிமேல் சுயேச்சை சின்னம்தான்.

தேமுதிக அங்கீகாரம் ரத்து

2004-ம் ஆண்டில் விஜயகாந்த் அரசியலில் அடி எடுத்து வைத்தார் நடிகர் விஜயகாந்த். தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா எனும் இரு ஆளுமைகள் அவர்களைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருந்த நேரத்திலும், திரையில் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருந்த நிலையில் அரசியலில் கால் பதித்தார்.

எம்ஜிஆருக்கு அடுத்து ரசிகர் மன்றங்களைக் கொண்ட ஏராளமான இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவந்து பொறுப்புகளை அளித்து தேமுதிக எனும் கட்சியை உருவாக்கி, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டு இல்லை கடவுளுடனும் மக்களுடனும் மட்டுமே கூட்டணி என அறிவித்து 2006-ல் முரசு சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டார்.

2006 சட்டப்பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் தேமுதிக வென்றது. விஜயகாந்த் தனித்து வென்றார். அந்தத் தேர்தலில் 27 லட்சத்து 66 ஆயிரத்து 223 வாக்குகளை தேமுதிக பெற்றது. வாக்கு சதவீதம் 8.45 ஆகும். விஜயகாந்த் வாங்கிய வாக்கு சதவீதத்தால் அதிமுக பெரிய அளவில் தோல்வியைத் தழுவியது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சி அமைந்தது.

தனித்துப் போட்டி என்பதில் உறுதியாக இருந்த அவர் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார். அதில் தேமுதிக அனைத்து தொகுதி யிலும் தோற்றது. பெற்ற வாக்குகள் 31 லட்சத்து 26 ஆயிரத்து 117. வாக்கு சதவீதம் 10 ஆக உயர்ந்தது..

கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் வேண்டாவெறுப்பாக போட்டி யிட்டு  29 இடங்களைப் பெற்ற தேமுதிக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றது. அப்போது தேமுதிக பெற்ற வாக்கு சதவீதம் 7.88 ஆகும்.

திமுகவை பின்னுக்கு தள்ளி விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பேற்றார். அதையடுத்து சட்டமன்றத்தில் ஜெயலதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு 2ஜி போன்ற ஊழல் காரணங்களால் நாடெங்கும் காங்கிரசுக்கு எதிரான அலை வீச, பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். ஆனால், ஜெயலலிதா மோடியா, லேடியா என சவால்விட்டு 37 தொகுதிகளையும் அள்ளினார். இந்த தேர்தலில்  கழுதையுடன் சேர்ந்து கட்டெறும்பு ஆன கதையாக தேமுதிகவும் தேய்வடைய தொடங்கியது. அப்போது, விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அந்தத் தேர்தலில் தேமுதிக வாக்கு வங்கி சரிந்தது. 20 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 5.19 சதவீதமாக குறைந்தது. பின்னர் அந்தக் கூடாரமே கலைந்தது.

அதையடுத்து 2016 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 10 லட்சத்து 34 ஆயிரத்து, 384 வாங்கிய. வாக்கு சதவீதம் 2.41.   தொடர்ந்து 2 தேர்தல்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது.

இதன் காரணமாகவும், தற்போது பாராளுமன்ற தேர்தலில் பெரும் சரிவை சந்தித்துள்ள நிலையில், தனது அரசியல் கட்சி அங்கீகாரத்தை இழந்து, முரசு சின்னத்தையும் பறிகொடுத்துள்ளது விஜயகாந்தின் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம்.

பாட்டாளி மக்கள் கட்சி

டாக்டர் ராமதாசின் வன்னியர் சங்கம் நாளடைவில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியாக உருவெடுத்தது. வட மாவட்டங்களில் உள்ள வன்னிய சமுதாய மக்களை குறி வைத்து தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம் ஆரம்ப காலத்தில் இடஒதுக்கீடு பிரச்சினைக்காக 1987ம் ஆண்டுவாக்கில்   மாபெரும் போராட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 18 பேரை பலிகொடுத்து பின்னர்  1990ம் ஆண்டு வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சியாக உருமாறியது.

அந்த கட்சியின் கொடியின் நீலம் , மஞ்சள் , சிகப்பு  வண்ணம்,  தாழ்த்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மதவாரி சிறுபான்மையினர் ஆகிய அனைத்து தரப்பினருக்காக உருவாக்கப்பட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார்.

ஆனால், 1989 சட்ட மன்றத் தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ளாமல், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். அதைத்தொடர்ந்து  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாமக தனித்து களமிறங்கயது.

தமிழகம், புதுச்சேரியில் 33 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக தோல்வியடைந்தாலும், 6% வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தது. பாமகவின் வளர்ச்சி திராவிட கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தின. மேலும் ராமதாசின் அதிரடி அறிவிப்புகள், செயல்பாடுகள் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் மக்களவை  தேர்தலை எதிர்கொண்டது பாமக.  அப்போது, முஸ்லிம் லீக் கட்சி, குடியரசுக் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, திமுக, அதிமுகவுக்கு எதிராக களத்தில் இறங்கியது.

தமிழக சட்டமன்றதுக்கான தேர்தலில்  199 தொகுதிகளிலும், நாடாளுமன்ற தேர்தலில் 31 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கினார் ராமதாஸ்.

ஆனால், அப்போது நடைபெற்ற ராஜீவ் படுகொலை காரணமாக, அனுதாப வாக்குகளால் அதிமுக காங்கிரஸ் கூட்டணி 224 தொகுதிகளில்  வெற்றி பெற்றது. ஆனால், அனுதாப அலையையும் மீறி  , பண்ருட்டி தொகுதி பாமக வேட்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் வெற்றிபெற்றார்.

பின்னர்  1996 தேர்தலுக்கு திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்தது. ஆனால் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கூட்டணி உடைந்த நிலையில், திவாரி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாமக களத்தில் இறங்கியது. இதில் 4 இடங்களை பாமக கைப்பற்றியது.

அதைத்தொடர்ந்து 1998ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிட்டது. அந்த கூட்டணியில், பாஜக, மதிமுக, தமிழக ராஜீவ் காங்கிரஸ் இருந்தன. 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் வென்றது.

இதன் காரணமாக வாஜ்பாய் அமைச்சரவையில் பாமகவைச் சேர்ந்த தலித் எழில்மலை சுகாதாரத் துறை இணை அமைச்சரானானர். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதால், வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது.

அதைத்தொடர்ந்து  1999ம் ஆண்டு பாஜகவின் தேசிய ஜனநாயக அணியில் அதிமுக விலகிக் கொள்ள திமுக கூட்டணி சேர்ந்துகொண்டது. அப்போது, பாமகவுக்குப் புதுச்சேரியையும் சேர்த்து 8 இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் 5 இடங்களை வென்றது. பாமகவைச் சேர்ந்த என்.டி.சண்முகம் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராகவும் இ.பொன்னுசாமி இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்கள்.

பின்னர் 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாமக மீண்டும் அதிமுக கூட்டணியில் இணைந்து 20 இடங்களை கைப்ப்றியது.

2004 பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவும் பாமகவும் கூட்டணியைவிட்டு வெளியேறின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்தன.

இந்த தேர்தலில் பாமக 5 தொகுதிகளை வென்றதன் காரணமாக, பாமகவுக்கு 2 அமைச்சர் பதவிகள் கிடைத்தது.  ஆர்.வேலு ரயில்வே துறை இணை அமைச்சரானார். அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சரானார்.

திமுகவுடனான மக்களவைத் தேர்தல் கூட்டணி, 2006 சட்ட மன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. 34 இடங்களில் போட்டியிட்ட பாமக, 18 இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால், இந்த கூட்டணி 2009 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துக்கொண்டது பாமக படுதோல்வியை எதிர்கொண்டது, இந்த தேர்தலின்போது,

மாநிலத்தின் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்றிய நிலையில், பாஜக கூட்டணியிலிருந்த பாமக எட்டு இடங்களில் போட்டியிட்டு தருமபுரியில் மட்டும் வென்றது. அன்புமணி ராமதாஸ், மக்களவை உறுப்பினரானார் .

2011 சட்ட மன்றத் தேர்தலில் திமுக கூட்டணியுடன் பாமக பெற்ற வாக்குகள் 5.23%. இதையடுத்து கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் பாமக தனது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டது.  ஆனால் 3 எம்எல்ஏக்கள் கிடைத்ததால்  மாநில கட்சி அங்கீகாரம் தப்பியது.

2014 லோக்சபா தேர்தலில் பாமக 1 இடத்தில் மட்டுமே வென்றது. அதன் வாக்கு சதவீதம் 0.4% ஆனது. இதனால் பாமக தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுத்தது.

தொடர்ந்து அங்கீகாரம் இழப்பு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பாமக தனித்துப் போட்டி யிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை யும் பறி கொடுத்தது. மொத்தமாக 5.3% வாக்குகளையே அது பெற்றுள்ளது.

6% வாக்குகளும் இல்லை 2 எம்.எல்.ஏ.க்களும் இல்லை என்பதால் தொடர்ந்தும் மாநில கட்சி அங்கீகாரத்தையும் இழந்துள்ளது.

பாமகவின் தோல்விக்கும் முக்கிய காரணம் அவரது குடும்ப அரசியல்தான். ஆரம்ப காலத் தில் தனது குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்ற கூறிய ராமதாஸ், பின்னர் தனது மகனை களத்தில் இறக்கி, அவருக்கு அமைச்சர் பதவியும் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்தார்.

அதுபோல திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று கூறிய ராமதாஸ், ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இதன் காரணமாக ராமதாஸ் மீதான நம்பகத்தன்மை பறிபோன நிலையில், இன்று அரசியல் கட்சி என்ற அங்கிகாரத்தை இழந்துள்ளது பாமக.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: DMDK, lost the recognition, pmk, political party
-=-