சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் குறித்த கிண்டல் – கேலிகள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

அதிமுக அரசை கடந்த காலங்களில் மிகவும் கடுமையாக விமர்சித்து, தனியாக புத்தகமே போட்டு கேவலப்படுத்திய கட்சி பாமக. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, 7+1 என்ற அடிப்படையில் தொகுதிகளைப் பெற்றது.

ஆனால், அவர்களின் அந்தக் கூட்டணி கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. ஏனெனில், எப்போதுமே, தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி துடுக்காக பேசுபவர் ராமதாஸ். அந்தளவிற்கு மோசமாக விமர்சித்த ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டதை கழுவி ஊற்றி வருகின்றனர் சமூக வலைதளங்களில்.

தேர்தல் நேரத்தில், இதுபோன்று சமூக வலைதளங்களில் அதிகரித்துவரும் கேலி – கிண்டல்களால் தங்களின் வெற்றி குறித்து அஞ்சத் தொடங்கிவிட்டனர் அக்கட்சியின் வேட்பாளர்கள். எனவே, இதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டி, பாமக தலைமையிடம் முறையிட்டுள்ளனர்.

– மதுரை மாயாண்டி