சென்னை: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் சாதிவாரி, வகுப்புவாரி விவரங்களை வழங்க உத்தரவிடக் கோரிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பாமக தலைவர் ராமதாஸ் சார்பில், உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் சாதி வாரியாக கணக்கு குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில்,  1989ஆம் ஆண்டு முதல் இதுவரை பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் விவரங்களைச் சாதி வாரியாக விவரம் வெளியிட   தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் இன்று  விசாரணைக்கு வந்தது.  இதற்கு தமிழகஅரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்பட்டது. அப்போது, ராமதாஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்த விவரங்களை அரசு வெளியிடுவதால் சமூக நல்லிணக்கம் பாதிக்கும் எனக் கூற எந்த அடிப்படையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பாமகவின்  வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், எந்தச் சமூகமும் கல்வி பெற எந்தத் தடையும் இல்லை எனவும், மனுதாரர் நல்ல தரமான பள்ளிகளைத் தொடங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்த விவரங்களைப் பெற்ற பின் போராட்டங்கள் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் உள்ளதா ராமதாஸ்-க்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.