சென்னை: தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமகவினர் இன்று போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இன்றைய போராட்டத்தின்போது, சென்னையில் பாமகவினர் பல்வேறு இடங்களில் திடீர் போராட்டம் நடத்தியதால், பெரும்பாலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ரயில்கள் மீது கற்களை வீசியதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதற்கு பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.  அதன்படி, இந்த போராட்டம் இன்று சென்னையில் தொடங்குகிறது. இதையொட்டி, பாமகவினருக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து, போராட்டத்தில்  பங்கேற்பதற்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். அவர்களை காவல்துறையினர் சுங்கக்சாவடிகளில் மடக்கி சென்னை செல்ல அனுமதி மறுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட பாமகவினர் வாலாஜாபேட்டை சுங்கச் சாவடியில் இருபுறங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியலில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு முதல் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் வாகனங்கள் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகளும் பயணிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை கண்காணிப்பாளர் மயில்வாகனன் மற்றும் வேலூர் சரக டிஐஜி காமினி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதுபோல வடமாநிலங்களில் சென்னை நோக்கி வரும் பாமகவினர். பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பேருந்துகள் மட்டுமின்றி, ஆங்காங்கே மின்சார ரயில்களையும் பாமகவினர் தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அலுவலகம் செல்வோர் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு கருதி சென்னையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடஒதுக்கீடு என்ற பெயரில், வன்னியர்களை தூண்டிவிட்டு, அறவழி போராட்டம் என்று ராமதாஸ் அறிவித்து உள்ள நிலையில், இன்று வன்னியர்கள் நடத்திய கல்வீச்சு, ரயில்மறியல், சாலை மறியல் போராட்டம் தமிழக மக்களிடையே மீண்டும் பாமகமீதான அதிருப்தியை அதிகரித்து உள்ளது.

ஏற்கனவே இடஒதுக்கீடு போராட்டத்தின்போது, மரங்களை வெட்டி சாலைகளில் வீசி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி, தமிழக மக்களை அச்சுறுத்தியதால்தான், பாமக இதுவரை தமிழக மக்கள் மனதில் இடம்பெற தவறிவிட்டது. தமிழகத்தில் அவர்களின் ஆட்சிக்கனவும் கலைந்துபோனது. திராவிடக் கட்சிகளைச் சார்ந்தே இருக்க வேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டது. இன்னைக்கும் அதிமுக போட்ட பிச்சை காரணமாகத்தான்,  பாமக இளைஞர் அணி தலைவர் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து வருகிறார். 

உண்மை இப்படி இருக்க, தற்போது சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, பாமக இடஒதுக்கீடு என்ற பெயரில் போராட்டத்தை ஏற்படுத்தி, தமிழகத்தை வன்முறை களமாக மாற்ற முயற்சிப்பது, தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை  உருவாக்கி உள்ளது.

புரிய வேண்டியவர்கள் புரிந்துகொண்டால் சரி.