புதுடெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், ‘பிஎம் கேர்ஸ்’ நிதி குறித்து கேட்கப்பட்ட தகவல்களுக்கு பதிலளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்தது, அந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணான செயல் என்றும், இதன்மூலம் அபராதம் விதிக்க முடியும் என்றும் கூறியுள்ளார் முன்னாள் மற்றும் நாட்டின் முதல் மத்திய தகவல் ஆணையராக பணியாற்றிய வஜாஹத் ஹபிபுல்லா.

கொரோனா சூழலை காரணம் காட்டி, பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் பெரியளவில் நிதி வசூல் வேட்டை நடத்தப்பட்டது. பின்னர், அதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்கப்பட்டதற்கு, ‘அலுவலகத்தின் வளங்கள் சமமற்ற முறையில் திருப்பப்படும்’ என்றுகூறி, விளக்கம் மறுக்கப்பட்டது.

ஆனால், அந்த சட்டத்தின் பிரகாரம், வழங்கும் தகவலின் வடிவத்தை மாற்றலாமே ஒழிய, முற்றிலும் மறுக்கக்கூடாது. அப்படி மறுத்தால் அபராதம் விதிக்கலாம் என்பதே நீதிமன்ற தீர்ப்புகளின் மூலம் வெளிப்பட்டுள்ள உண்மைகளாகும்.

எனவே, அந்த வகையில் பிரதமர் அலுவலகம் சட்டப்படி தவறிழைத்துள்ளது மற்றும் அந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா.