40சதவித விண்ணப்பங்கள் நிராகரிப்பு- தகவல் ஆணையம்!

டில்லி,

கடந்த ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 9.76 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் சுமார் 40 சதவிதம்  நிராகரிக்கப்பட்டதாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தகவல் ஆணையத்தின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,கடந்த 2015-16-ல் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மொத்தம் 9.76 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2014-15-ல் தாக்கலான விண்ணப் பங்களை விட 22.67 சதவிதம்  அதிகம் ஆகும். இருப்பினும் பல காரணங்களுக்காக 40 சதவித  விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட சில விவரங்களுக்கு ஆர்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரிவு 9-ன் கீழ் (தனியார் காப்புரிமை) 1 சதவித  மனுக்களும் 26-ன் கீழ் (பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவல்) 7 சதவித மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஆர்டிஐ சட்டத்தின் 8-வது பிரிவின் கீழ் (நாட்டு நலனுக்கு எதிரான செயல்) வரும் பல்வேறு உட்பிரிவுகளின் கீழ் 47 சதவித மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இவ்வாறு விலக்கு அளிக்காத போதிலும், வேறு சில காரணங்களுக்காக (மர்மமான விண்ணப்பங்கள் என்ற அடிப் படையில்) 43 சதவித விண்ணப் பங்கள் நிராகரிக்கப்பட்டன. மத்திய தகவல் ஆணையம் மட்டும் கடந்த ஆண்டில் 28,188 புகார்கள், மேல்முறையீட்டு மனுக்களுக்கு தீர்வு வழங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சுமார் மூன்றாயிரம் அதிகமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

English Summary
PMO resorts to ‘mysterious’ category to reject RTI applications