ரஃபேலை மிஞ்சும் மோடி அரசின் பயிர் காப்பீடு திட்ட முறைகேடு: சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு

--

டில்லி:

த்திய அரசின் பயிர் காப்பீடு திட்டமான பிரதமர் “பிமா பசல் யோஜனா” திட்டம், ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என மூத்த பத்திரிகையாளரும், வேளாண் ஆர்வலருமான பி. சாய்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் காப்பகத்தின் நிறுவனர் சாய்நாத், மத்திய அரசின் தற்போதைய கொள்கைகள் ‘விவசாயி களுக்கு எதிரானது’ என்று கடுமையாக சாடி உள்ளார்.

சமீபத்தில்  செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களுக்கே பயிர் காப்பீடு வழங்குவதற்கான பணியை அளித்ததன் மூலம் மத்திய அரசு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது என்றார்.

உதாரணமாக, மகாராஷ்டிராவில் 2.80 லட்சம் விவசாயிகள் சோயா விவசாயம் செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்காக காப்பீடு தொகையாக ரூ.19.20 கோடி யைக் காப்பீடு நிறுவனத்திடம் செலுத்துகிறார்கள். மத்திய அரசும், மாநில அரசும் தனித்தனியாக தலா ரூ.77 கோடி செலுத்துகிறார்கள். ஒட்டுமொத்தமாக இதன் மூலம் ரிலையன்ஸ் காப்பீடு நிறுவனம் ரூ.173 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த பயிரும் மழையில்லாமல் கருகிப்போனால் கூட காப்பீடு நிறுவனம் தரும் இழப்பீட்டுத்தொகை ரூ.30 கோடி மட்டுமே. ஆனால், எந்தவிதமான முதலீடும் செய்யாமல் காப்பீடு நிறுவனம் ரூ.143 கோடி எடுத்துக்கொள்ளும். இது ஒரு மாவட்டத்துக்கான பணம், இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா ஊழல் நடந்து வருகிறது.

நாட்டில் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.  ஆனால், அதுகுறித்த எந்தப் புள்ளி விவரங்களையும் மத்திய அரசு வெளியிடுவதில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி, கடந்த 1995-2015 ஆம் ஆண்டுகளில் 3.10 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்கள் அரசாங்கத்தால் வெளியிடப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

விவசாயிகள் பாதுகாப்பு மற்றும் தற்கொலைகள் குறித்து ஆராய்வதற்காக 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், கோரிக் கையை முன்வைக்கவும் வரும் நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் டெல்லியில் பாராளு மன்றத்தை நோக்கி சாய்நாத் விவசாயிகளுடன் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஜிஎஸ்டிஐ அமல்படுத்த இரவில் நாடாளுமன்றத்தைக் கூட்டும் மத்திய அரசால், ஏன் நம் விவசாயிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது, எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.