பிஎன்பி வங்கி மோசடி: வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது

லண்டன்:

ஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நிரவ் மோடிக்கு லண்டன் கோர்ட்டு கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்‌ஷி ஆகியோர், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி தலைமறைவாகி விட்டனர்.

இந்த முறைகோடு தொடர்பாக  சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையில் இந்தியாவில் இருந்து தப்பிய  நிரவ் மோடி, பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியும் நிரவ் மோடி, லண்டனில் ரூ. 73 கோடியில் பங்களா வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரங்களை வெளியிட்டது.

இந்த நிலையில், நிரவ்மோடியை  நாடு கடத்தி கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகளை இந்திய  அமலாக்கத்துறை சார்பில் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் சமீபத்தில் உள்துறை அமைச்சகம் கையெழுத்திட்டு, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. இந்த நிலையில்   நிரவ் மோடியை லண்டன் போலீசார் இன்று கைது செய்தனர்.

அவரை நளை  வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் நிரவ் மோடியின் மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால், அவரை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், நிரவ் மோடி உடனே ஜாமின் வாங்கிவிடுவார் என்றும் நம்பப்படுகிறது.

ஏற்கனவே விஜய் மல்லையா வழக்கிலும் இதுபோல அவர் கைது செய்யப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அதுபோல, அவர்மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையிலும், அவரை இன்னும் நாடு கடத்தாமல் பிரிட்டன் கால தாமதம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.