மும்பை:

நாட்டின் 2வது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) மும்பை கிளையில் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதை அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்தனர். கிளை மோசடி மற்றும் அதிகாரமற்ற முறையிலும் இத்தகைய பரிவர்த்தனை மூலம் மோசடி நடந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

இந்த வகையில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை மோசடி பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, ஒரு நகை நிறுவனம் மீது பிஎன்பி அதிகாரிகள் சிபிஐ.யிடம் புகார் அளித்துள்ளனர். ஏர்கனவே ரூ.280 கோடி ரூபாயை ஏமாற்றியதாக நிரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வங்கியின் ஓய்வு பெற்ற துணை மேலாளர்கள் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் கரத் ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி வெளிவந்ததை தொடர்ந்து பங்குச் சந்தையில் பிஎன்பி பங்குகள் சரிவை சந்தித்தன. 10.18 சதவீத சரிவுடன் ரூ.145.20 என்ற அளவில் வர்த்தகம் முடிவுற்றது. இதன் மூலம் வங்கியில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் 2010ல் சிட்டி பேங்க் ஹரியானா கிளையில் ரூ. 400 கோடி மோசடி நடந்தது. கடந்த ஆண்டு பேங்க் ஆப் பரோடாவில் ரூ. 6 ஆயிரம் கோடி அளவுக்கு இதேபோன்ற முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.