Random image

பிஎன்பி முறைகேடு: நிரவ் மோடி சகோதரியை கைது செய்ய இன்டர்போல் நோட்டீஸ் வெளியீடு

டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் நிரவ் மோடி தங்கைக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சி ஆகியோர் மீது சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள நிரவ்மோடி சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகள், டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது.

நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியின் சகோதரி புர்வி தீபக் மோடியும் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார். பெல்ஜியம் குடியுரிமை பெற்றுள்ள புர்வி மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் வகையில் சர்வதேச காவல்துறையான ‘இன்டர்போல்’ கைது நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய அரசால் தேடப்படும் புர்வி தீபக் மோடி (வயது 44) எந்த நாட்டில் காணப்பட்டாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.