பிஎன்பி மோசடி: கடந்த மாதமே நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பி ஓட்டம்

டில்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் கோடீஸ்வர வைர வியாபாரி நிரவ் மோடி மீது சிபிஐ.யில் புகார் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 29ம் தேதி வங்கியில் ரூ. 280 கோடி மோசடி நடந்தது குறித்து சிபிஐ வசம் வங்கி அதிகாரிகள் புகார் செய்திருந்தனர்.

ஆனால் இதற்கு முன்னனேர ஜனவரி 1ம் தேதி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். மேலும், பெல்காம் குடியுரிமை பெற்ற அவரது சகோதரர் நிஷாலும் அன்றைய தினமே தப்பிச் சென்றுள்ளார். மனைடி அமி, தொழில் பங்குதாரர் மேகுல் சோக்சி ஆகியோர் ஜனவரி 6ம் தேதி தப்பிச் சென்றுவிட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் 4 பேர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன் பின்னர் இவர்களின் நடமாட்டம் குறித்து தகவல் அளிக்குமாறு அனைத்து விமானநிலையங்கள், துறைமுகங்களுக்கு அமலாக்க பிரிவு லுக் அவுட் சுற்றறிக்கை அனுப்பியது.

கடந்த ஜனவரி 23ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிரவ் மோடி கலந்துகொண்ட புகைப்படம் மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் புகார் செய்வதற்கு 6 நாட்களுக்கு முன் இது நடந்துள்ளது.

நிரவ் மோடி இந்திய குடியுரிமை பெற்றவர். ஆனால், அவரது சகோதரர் நிஷால், மனைவி அமி ஆகியோர் இந்திய குடியுரிமை அற்றவர்கள். 2013ம் ஆண்டில் இருந்து பிரபலமான இந்தியர்கள் மற்றும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.