டில்லி:

ஆர்பிஐ வெளிப்படையான தணிக்கையை மேற்கொள்ளாமல் போனது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் இதர புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வங்கிகளை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு ஆர்பிஐ வசம் உள்ளது. இதில் நேர்மையின்மை ஏற்பட்டால் சிவிசி தலையிடும். பிஎன்பி.யில் முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் ஆர்பிஐ வெளிப்படையான தணிக்கையை மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டிய தணி க்கையில் இருந்து ஆர்பிஐ விலகி சென்றுவிட்டது. நிதிக்கு அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில் ஆர்பிஐ அபாயம் சார்ந்த தணிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ஆர்பிஐ ஒவ்வொரு வங்கியாகவும், ஒவ்வொரு கிளையாகவும் பார்க்கபோவதில்லை. சரியான முறையிலும், நெறிமுறை வழியிலும் வங்கிகள் தங்களது தொழிலை மேற்கொள்வதை உறுதிபடுத்த வேண்டியது ஆர்பிஐ கடமை. ஒரு தவறு நடந்துவிட்டால் அதற்காக அனைவரையும் குற்றம் கூற முடியாது. ஆண்டுதோறும் முடியவில்லை என்றாலும் 2, 3, அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அபாயம் சார்ந்த தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். இது நல்ல கொள்கையாகும்.

ஆனால், அவர்கள் அந்த அபாயத்தை எப்படி அளவீடு செய்கின்றனர் என்பது தெரியவில்லை. இருந்தும் எப்படி இது போன்ற முறைகேடுகள் வெளியில் தெரியாமல் போனது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஏதோ பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் தான் முறைகேடு நடந்துள்ளது. இதர வங்கிகள் 100 சதவீதம் சரியாக செயல்படுகிறது என்பது கிடையாது. ஆனால், ஒழுங்கான நடைமுறை ஒன்று உள்ளது. அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே நம்பிக்கை தான் உள்ளது’’ என்றார்.

‘‘வங்கிகளை பாதுகாக்கும் கண்காணிப்பு நடைமுறையை வலுப்படுத்த வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும செயல்பாட்டு நடைமுறைகளையும் வலுப்படுத்த வேண்டும். இவை அனைத்தும் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். முறைகேடுகளை வங்கிகள் கண்டுபிடிக்க எந்த வகையான கால நிர்ணயமும் கிடையாது. பிஎன்பி விவகாரம் விசாரணையில் உள்ளது. அதனால் அது குறித்து எந்த தகவலையும் கூற இயலாது. பிஎன்பி மற்றும் ஆர்பிஐ இடையே பல பிரச்னைகள் உள்ளது. இவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது’’ என்றார் சவுத்ரி.

முன்னதாக அருண்ஜெட்லி கடந்த பிப்ரவரியில் இந்த முறைகேட்டை கண்டுபிடிக்காத ஒழுங்குபடுத்தும் அதிகார வர்கத்தை குற்றம்சாட்டினார். அரசியல்வாதிகளும், ஒழுங்கு படுத்த வேண்டியவர்களையும் இந்திய நடைமுறையில் சட்டத்தின் முன் நிறுத்தமுடியாமல் போய்விடுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.