டில்லி:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிஎன்பி வங்கி முறைகேடு தொடர்புடைய 120 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி கடன் மோசடி நடைபெற்றது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதுபோல தற்போது கனிஷ்க் நகை நிறுவனம், நாதெள்ளா நகை நிறுவனம் போன்ற நிறுவனங்களின் மோசடியும் வெளியே தெரிந்து வருகிறது.

இந்நலையில், பி.என்.பி. வங்கி மோசடி தொடர்பாக சந்தேகத்துக்குரிய 120 நிறுவனங்களின் செயல்பாடுகளை அமலாக்கத்துறையினர் கண்காணித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

லோக்சபாவில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துமூலம் பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவபிரதாப் சுக்லா,   பஞ்சாப் வங்கி மோசடி தொடர்பாக இதுவரை 247 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  7,638 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும்,   இம்முறைகேட்டில் தொடர்புடை யதாக சந்தேகிக்கப்படும் 120 நிறுவனங்களை அமலாக்கத்துறை கண்காணித்து வருவதாகவும்,  விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதால் அந்நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.