பிஎன்பி மோசடி: நிரவ் மோடி மீது பிரதமர் அலுவலகத்தில் 2016ம் ஆண்டில் புகார்

மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கண்டுபிடிக்கப்பட்ட 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார்.

இந்த விவகாரத்தில் நிரவ் மோடியின் தாய் மாமன் மெகுல் சோக்ஸி என்பவர் நடத்தி வரும் மும்பை கீதாஞ்சலி ஜெம்ஸ் என்ற நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் முறைகேடு தொடர்பாக 2016ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு மும்பையை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் புகார் மனு அனுப்பியுள்ளார். இந்த மனுவை பிரதமர் அலுவலகம் மும்பை எவரெஸ்ட் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் அரசு அதிகாரிக்கு அனுப்பிவைத்துள்ளது.

ஆனால் இதன் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் தான் தற்போது பெரிய அளவிலான பண மோசடியில் நிரவ் மோடியுடன் இணைந்து கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனமும் ஈடுபட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.