கொல்கத்தா

நிரவ் மோடி – பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியின் எதிரொலியால் ஆபரண வர்த்தகம் சரிவடையலாம் என கூறப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில் வைரவியாபாரி நிரவ் மோடி சுமார் 11400 கோடி அளவில் கடன் வாங்கி மோசடி செய்தது தெரிந்ததே.   அதையொட்டி தற்போது வங்கிகளில் ஆபரண வர்த்தகர்களுக்கு கடன் அளிப்பதில் கடும் கெடுபிடிகள் உண்டாகி இருக்கிறது.    இந்நிலையில் மேற்கு வங்கத்தில் “சோனார் சன்சார்”  என்னும் பெயரில் ஒரு ஆபரண கண்காட்சி நடைபெற்றது.

அந்த கண்காட்சியில் இந்திய ஆபரண ஏற்றுமதி கழகத்தின் கிழக்குப் பகுதி செயலாளர் பிரகாஷ் சந்திர பின்சா கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர், “இந்த மோசடியினால் ஆபரண உற்பத்தியாளர்களும் விற்பவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.    கடன் கொடுப்போரின் மனநிலையில் ஆபரண வர்த்தகர்கள்,  மற்றும் ஆபரண உற்பத்தியாளர்கள் அனைவருமே மோசடிக்காரர்களாக அறியப்படுகின்றனர்.   இதனால் அவர்களுக்கு கடன் கொடுக்க அனைவருமே அஞ்சுகின்றனர்.

இந்த மோசடியால் வங்கிகள் மட்டுமின்றி காப்பீடு நிறுவனங்களுக்கும் ஒரு வகை  அச்சத்தை உண்டாக்கி உள்ளது.    அதனால் வங்கிகள் இனி கடன் வாங்குபவர்களிடம் ஈடாக  அவர்களின் சொத்துக்களை அடகு வைக்கச் சொல்லவும் வாய்ப்பு உள்ளது.    மேலும் இந்த தொழிலே ஒரு அபாயகரமான தொழில் என வங்கிகள் கருதவும் வாய்ப்புள்ளது.   அது போல நடக்கக் கூடாது என்பதே என் விருப்பம்”  என தன் உரையில் குறிப்பிட்டுள்ளார்.