உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் கொலை

ரிஸ்ஸா, கென்யா

கென்யா : உலகின் கடைசிப் பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி குட்டியுடன் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டது.

உலகின் மிக அரிய விலங்குகளில் ஒன்றான வெள்ளை நிற ஒட்டகச்சிவிங்கி கென்யா நாட்டில் மட்டுமே இருந்து வந்தன.  இதில் கடைசிப் பெண் ஒட்டகச் சிவிங்கி தனது குட்டியுடன் கிழக்கு கென்யா பகுதியிலுள்ள கரிஸ்ஸா வனப்பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு குட்டியுடன் கண்டறியப்பட்டது.

ஏற்கனவே இந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கிக்குப் பிறந்த மற்றொரு ஆண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி அதே வனப்பகுதியில் வசித்து வருகிறது.  மிகவும் அரிய விலங்கான இந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி தனது குட்டியுடன் வேட்டைக்காரர்களால்  கொல்லப்பட்டுள்ளது.  இந்த அதிர்ச்சி தகவலை கென்யா வன விலங்கு பாதுகாவல அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், “உலகின் அபூர்வ விலங்கான வெள்ளை ஒட்டகச்சிவிங்கி தனது குட்டியுடன் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளது.  அவை இரண்டும் எலும்புக் கூடு வடிவில் கரிஸ்ஸா வனப்பகுதியில் கிடைத்துள்ளது.   இதனால் இவ்வகை விலங்குகளில் ஒரே ஒரு ஆண் மட்டுமே மிஞ்சி உள்ளது.

இந்த இரு விலங்குகள் வேட்டையாடப்பட்டது உலக சமுதாயத்துக்கு ஒரு பெரிய அடியாகும்.  அழிந்து வரும் விலங்குகளைக் காக்க இது உலக மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி ஆகும்.  இனியாவது அரிய விலங்குகளைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.