தூத்துக்குடி: நடிகர்களே இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்!: அறிவுமதி கவிதை

 

நடிகர்களே..

இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்..

உங்களுக்கு

மூச்சத் திணறல் ஆகிவிடும்

எல்லாம் அடங்கட்டும்

இன்னும்தான்

தேர்தலுக்கு

நாளிருக்கிறதே!

நடிகர்களே!

உங்கள்

அண்ணன்கள்

நன்றாக பேட்டி கொடுத்துக் கொண்டு

பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இருக்கட்டும்

எங்கள் அண்ணன்கள்தான்

செத்துக் கிடக்கிறார்கள்!

நடிகர்களே!

உங்கள் மகள்கள்

பாதுகாப்பாக

படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா?

பாதுகாப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்களா?

இருக்கட்டும்

எங்கள் மகள்கள்தான்

செத்துக் கிடக்கிறார்கள்!

நடிகர்களே!

இவர்கள் அரசியல் வேறு

உங்கள் அரசியல் வேறா?

இவர்களுக்கு சுடுகாடு!

உங்களுக்கு சட்டமன்றமா?

ஓ.. நாடாளுமன்றமுமா?

நல்லது நடிகர்களே!

கிளிசரினோடு

தேர்தல் பிரச்சாரத்திற்குப்

புறப்படுமுன்

உங்கள் எசமானர்களிடம்

கேட்டுச் சொல்லுங்கள்..

எங்கள் உறவுகளின்

சாவுக்காக

நாங்கள்

கொஞ்சம் அழுது கொள்ள

அனுமதி கிடைக்குமா!!!

You may have missed