கவிஞர் நா.காமராசன் நேற்று (24-01-2017)     இரவு சென்னையில் திடீரென காலமானார். அவருக்கு வயது 75.

1942 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்த நா.காமராசன், தமிழின் மிக முக்கிய கவிஞர்களுள் ஒருவராக விளங்கியவர். . அவருடைய  தந்தை பெயர் நாச்சிமுத்து,   தாயார் இலட்சுமி அம்பாள்.

நா.கா., , மதுரை தியாகராயர் கலைக்கல்லூரியில் படித்தார். அப்போது  நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று சிறை சென்றவர்

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் மொழிபெயர்ப்பு துறையிலும்  பணியாற்றியவர்.

எம்.ஜி.ஆர் காலத்தில் திரைப்படங்களுக்கு பாடல்கள்ம் எழுதியஇவர், அ.தி.மு.கவில் முக்கிய பதவிகளிலும் இருந்துள்ளார். காமராசனின் எழுத்துக்களில் நிறைய புத்தகங்களும் வெளிவந்துள்ளன. சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று இரவு உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார்.

நா. காமராசன், தமிழ் புதுக்கவிதை இயக்க முன்னோடியும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதி வந்த இவர் காலப்போக்கில் வசனகவிதை, புதுக்கவிதை ஆகிய துறைகளுக்கு மாறி அவற்றிலே தன் சிறப்பை வெளிப்படுத்தினார். கிராமியச் சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார். இவர் ஒரு உருவகக் கவிஞர் ஆவார். அழகான கவிதைகளால் பொருத்தமற்ற கொள்கைகளைச் சாடும் காமராசன், “கவியரசு, சோசலிசக்கவிஞர், புதுக்கவிதையின் முன்னோடி, புதுக்கவிதை ஆசான்” என்றும் அழைக்கபடுகிறார்.

“தன் கால்களில் இரத்தம் கசியக்கசிய பழைய முட்பாதைகளில் முன்னேறி முதலில் புதுக்கவிதை உலகுக்கு ஒரு புதுப்பாதை அமைத்தவன் நா. காமராசன் தான் என்பதை மூர்ச்சை அடைந்தவன் கூட மறந்து விடக் கூடாது” என்று கவிஞர் வைரமுத்துவால் புகழப்பட்டவர்.