ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டான அல்டி-யில் வீட்டுக்கு தேவையான காய்கறிகளை வாங்க சென்ற அலெக்சாண்டர் வைட் மற்றும் அமீலி நீட் ஜோடிக்கு ஏற்பட்ட அனுபவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.

வீட்டுக்கு தேவையான லெட்டூஸ் எனப்படும் முட்டைகோஸ் வடிவில் இருக்கும் ஒருவகை கீரை உள்ளிட்ட பொருட்களை வாங்கி கையிலெடுத்துக்கொண்டு வந்து பில் போட்டு தன் தோல்பையில் மாட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தவருக்கு காத்திருந்தது ஆச்சரியம் மட்டுமல்ல பாம்பும் தான்.

பையிலிருந்த பொருட்களை எடுத்தபோது ‘லெட்டூஸ்’ இருந்த பாக்கெட்டுக்குள் ஏதோ ஒன்று நெளிவதை கண்ட வைட், அது முக்கால் அடி நீளமுள்ள ஒரு குட்டி பாம்பு என்று தெரியவந்ததும் விக்கித்துப்போனார்.

அதுவரை தூங்கிக்கொண்டிருந்த அந்த பாம்பு ‘வைட்’டுடனான சைக்கிள் பயணத்தில் ஏற்பட்ட இடையூறால் விழித்துக்கொண்டு அந்த பாக்கெட்டுக்குள் நெளிந்து கொண்டிருந்தது.

உடனடியாக வனவிலங்கு மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்த அலெக்சாண்டர் வைட், அவர்கள் வரும் வரை ஒருவழியாக அதை அப்படியே ஒரு பெட்டியில் போட்டு மூடி வைத்தார்.

அல்டி சூப்பர் மார்கெட்டுக்கும் தகவல் கொடுக்க மறக்கவில்லை, அவர்கள் வந்து பார்த்ததில் அந்த பாக்கெட்டின் ஒரு பக்கத்தில் ஓட்டை இருந்ததும் அதன் வழியாக தான் பாம்பு உள்ளே சென்றிருக்க முடியும் என்று உணர்த்த அவர்கள், இதனை எந்த பகுதியில் இருந்து வாங்கினார்களோ அங்கேயே திருப்பி அனுப்ப முடிவு செய்தனர்.

அதற்குள்ளாக வன விலங்கு பாதுகாவலர்களும் வந்து சேர, இது ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் கொடிய விஷ பாம்பு என்றும் இந்த பாம்பு தீண்டினால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறினர்.

இதுகுறித்து, சூப்பர் மார்க்கெட் நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.