காவல்துறையினருக்கு கொரோனா போன்ற மற்றொரு தொற்று நோய்…. சாத்தான்குளம் தந்தைமகன் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற கிளை

மதுரை:

காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சாத்தான்குளம் தந்தை – மகன் கொலையில்  உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி,   மாவட்ட எஸ்.பி.  இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையினர் பொதுமக்களை தாக்குவது,  கொரோனா போன்ற மற்றொரு நோய் என்று கடுமையாக சாடினர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தென்மவாட்டங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில்,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்  தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக காவல்துறை டிஜிபியும் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளரும் ஆஜராக உத்தரவிட்ட நிலையில்,  மாவட்ட எஸ்.பி. அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. விசாரணை அறிக்கை மற்றும் பிரேதப் பரிசோதனை விடியோ பதிவு ஆகியவற்றை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

அதனடிப்படையில் மாவட்ட எஸ்.பி. விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். 

அதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  காவல்துறையினர் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர், போதிய மனநல ஆலோசனை வழங்க டிஜிபி பரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று என்று கடுமையாக சாடினர்.

தந்தை, மகன் இறந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படும், நீதிமன்றத்தை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள், கோவில்பட்டி கிளைச்சிறையின் பதிவேடுகள், வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர்.

கோவில்பட்டி சிறையில் மற்றொரு கைதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து மாவட்ட நீதிபதி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

மேலும், சாத்தான்குளம் சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கூறி நிதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.