குவஹாத்தி: அஸ்ஸாம் மாநில தர்ராங் மாவட்டத்தின் புறக்காவல் நிலையம் ஒன்றில் 3 பெண்கள் ஆடை களையப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பெண்களின் சகோதரர் மீது, ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைக்காக காவல்துறையினர் இந்தப் பெண்களை அழைத்துக்கொண்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணி பெண்ணுக்கு இரண்டு காவல்துறையினரால் செய்யப்பட்ட சித்ரவதை காயங்களால் அவரின் கர்ப்பமே கலைந்து போனதாக, அப்பெண்களின் தாயார் நிருபர்களிடம் தெரிவித்தார். அந்த இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர் பெண்ணாம். இந்த சம்பவம் செப்டம்பர் 8ம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தமக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பத்திரிகையாளர்களிடம் அப்பெண்கள் தெரிவித்ததையடுத்து, உதவி ஆய்வாளர் மகேந்திர சர்மா மற்றும் காவலர் பினிதா போரோ ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தர்ராங் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை விசாரணையில் ஈடுபடுமாறு பணித்துள்ளதாக அம்மாநில காவல்துறை இயக்குநர் குலதார் சைகியா தெரிவித்துள்ளார்.