சேலம்:

பாலியல் விவகாரத்தில் பெண்களின் படத்துடன் ஊடகத்தில் செய்தி வெளியிடக்கூடாது என்ற சட்டத்தை மீறியதாக பாலிமர் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மற்றும் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு தொடுத்துள்ளனர்.

கல்யாண சுந்தரம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள விலாரிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதான 12ம் வகுப்பு  மாணவியும் அவருடைய இரு தோழிகளும் கடந்த மாதம் வீட்டை விட்டு  சென்றுவிட்டனர்.   இது குறித்து மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார் அடுத்த இரு நாட்களில்  மாணவியையும் அவரது தோழிகளையும் மீட்டனர்.

தனது தந்தை மற்றும் சித்தப்பா இருவரும் தன்னை பாலியல் சித்ரவதை செய்ததால், வீட்டை விட்டு சென்றுவிட்டதாக போலீசாரிடம் மாணவி வாக்குமூலம் அளித்தார்.  இதையடுத்து மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த மே 8-ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க சென்றார் அந்த மாணவி. அதாவது, தன்னை மிரட்டி, தனது தந்தை மீதே புகார் கொடுக்க வைத்துவிட்டார்கள்என்று  புகார் கொடுக்க வந்திருந்தார்.

அப்போது அவரை பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளர் வினோத்குமார் என்பவர் பேட்டி கண்டார். அந்த மாணவியின் பேட்டி கடந்த மே 8,9 – தேதிகளில் பாலிமர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பானது.

அந்த மாணவி முகத்தை மூடியபடிதான் பேட்டி அளித்தார். தவிர, பாலிமர் டிவியிலும் கிராபிக்ஸ் மூலம் மாணவியின் முகத்தை மூடியே செய்தியை ஒளிபரப்பினார்கள்.

ஆனால், அந்த மாணவியின் முகம் தெரியும்படியாக பாலிமர் டிவி செய்தி ஒளிபரப்பு செய்ததாக, வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்துள்ளார்.

அத் தொலைக்காட்சியின் சேலம் செய்தியாளர் வினோத், செய்தியாசிரியர் தினேஷ் மற்றும் உரிமையாளர்  கல்யாணசுந்தரம் ஆகியோர் மீது, இந்திய தண்டனை சட்டம் 288 (ஏ) மற்றும் ரிட் வித் 66(ஏ) ஐ.டி. ஆக்ட் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனியார் தொலைகாட்சி செய்தியாளர், செய்தியாசிரியர் மற்றும் உரிமையாளர் ஆகியோர் மீது பொய்யான தகவலின் பேரில் வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது