கோவை திமுக எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு!

 

கோவை:

குடிநீர் விநியோகம் தொடர்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய  திமுக எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகராட்சியிலுள்ள பீளமேடு, 38, 39-வது வார்டு,  கிரியம்மன் கோயில் வீதி, பயனீர் மில் சாலை, முத்து வீதி, கள்ளிமேடு, ரொட்டிக் கடை மைதானம், எல்லைத் தோட்டம் சாலை போன்ற பகுதிகளில் குடிநீர் சரியாக வருவது கிடையாது. குறைந்தது  20-நாள்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. நா.கார்த்திக்கிடம் புகார் கூறினர்.

1-k1ntitled-1

எம்எல்ஏ கார்த்திக் இதுகுறித்து  மாநகராட்சி அதிகாரிகளிடம் எடுத்துரைத்து ஆவன செய்யயுமாறு கோரியிருந்தார். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் மற்றும்  ம.தி.மு.க. பகுதிச் செயலர் வெள்ளிங்கிரி, பாஜக மகளிரணி நிர்வாகி மகேஸ்வரி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் துணையோடு  ரங்கம்மாள் வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையறிந்த  மாநகராட்சி அதிகாரிகள், நேரில் வந்து,  போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்ளிட்டோரிடம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறி ‘போராட்டத்தை கைவிடும்படி கூறினர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால்,  குடிநீர்த் தொட்டியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநகராட்சி வடக்கு மண்டல உதவிப் பொறியாளர்  நாசர், பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் காரணமாக எம்எல்ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.,.

இதன்பேரில், எம்.எல்.ஏ. கார்த்திக், மதிமுக நிர்வாகி வெள்ளிங்கிரி, பாஜகவின் மகேஸ்வரி ஆகியோர் மீதும் மேலும் பெயர் குறிப்பிடப்படாத சிலர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது, அனுமதியின்றி கூட்டம் கூடுதல், அரசு இடத்தில் மக்களைத் திரட்டி போராடுதல், அரசு அதிகாரிகளிடம் அவமரியாதையாக நடந்து கொள்ளுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.