ராணுவ அதிகாரியாக நடித்து பெண்களை ஏமாற்றியவர் லக்னோவில் சிக்கினார்

க்னோ

ராணுவ அதிகாரி போல் வேடமிட்டு வேலை வாங்கித் தருவதாக பெண்களை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் பாரைச் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா. சுமார் 40 வயதாகும் இவர் கடந்த 2017 ல் இருந்து லக்னோ நகரில் வசித்து வருகிறார். எம் பி ஏ படித்துள்ள இவர் முகநூலில் லெப்டினெண்ட் கர்னல் ராகுல் மிஸ்ரா என்னும் பெயரில் ஒரு போலிக் கணக்கை தொடங்கினார். அந்த பக்கத்தில் தான் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

இவர் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். அதில் இளம்பெண்களே அதிகமாக உள்ளனர். அத்துடன் ஒரு சிலரிடம் திருமணம் செய்துக் கொள்வதாகக் கூறியும் பண மோசடி செய்துள்ளார். அரவிந்த் மிஸ்ராவைக் குறித்து பல இளம்பெண்கல் புகார் அளித்துள்ளனர். அவர் தனது முகநூல் கணக்கை மூடி விட்டு மாயமாகி விட்டார்.

அரவிந்த் மிஸ்ரா ஊரை விட்டு செல்லும் போது ராணுவ உடையில் சென்றுள்ளார். அவரை வழியில் நிறுத்திய காவல்துறையினர் அவருடைய அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அவர் தனக்கு பல காவல் அதிகாரிகளை தெரியும் எனக் கூறியும் விடாமல் அடையாள அட்டையை கேட்டதால் அவர் தன்னிடம் அடையாள அட்டை இல்லை என்பதை ஒப்புக் கொண்டார்.

அதே நேரத்தில் காவல்துறை தேடி வரும் போலி ராணுவ அதிகாரி இவர்தான் என்பதை உணர்ந்த காவல் துறையினர் இவரிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அவர் அப்போது அனைத்து உண்மைகளையும் ஒப்புக் கொண்டுள்ளார். அவரிடம் இருந்து இரண்டு ரிவால்வர்கள், ஒரு கைத்துப்பாக்கி, ராணுவ முத்திரை பொருத்திய ஒரு வெள்ளை கார், வங்கி கணக்கு புத்தகங்கள், லாப் டாப் மற்றும் மொபைல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.