ஐதராபாத்

வீடுகளுக்கு வந்து உணவு வழங்கும் ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக ஐதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.

சமீப காலங்களாக ஸ்விக்கி மற்றும் சொமோட்டொ போன்ற நிறுவனங்களின் மூலம் பலரும் உணவுகளை வாங்குகின்றனர். குறித்த நேரத்தில் செல்வதற்காக இந்த நிறுவன ஊழியர்கள் படு வேகமாக செல்கின்றனர். இதனால் அவர்கள் சாலைப் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் பல இடங்களில் சிக்னல்களைக் கண்டு கொள்ளாமல் செல்கின்றனர்.  ஐதராபாத் நகரில் மட்டும் ஆயிரக்கணக்கில் இது போல  புகார்கள் வந்துள்ளன.

இதை ஒட்டி ஐதராபாத் நகர காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார். “இந்த உணவு வழங்கும் நிறுவன ஊழியர்களில் பெரும்பாலானோர் மீது சாலைப் போக்குவரத்து விதிகளை மீறுவதாக புகார்கள் வந்துள்ளன. இவர்கள் சிக்னலை மதிக்காமல் மிகவும் வேகமாக வண்டியை செலுத்துகின்றனர். பலர் ஹெல்மெட் அணிவதில்லை. அத்துடன் வண்டியை ஓட்டிக் கொண்டே மொபைலில் பேசுகின்றனர்.

அது மட்டுமின்றி பலர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி தண்டனை அடைந்துள்ளனர். நடைபாதையில் வாகனங்களை நிறுத்துகின்றனர். தற்போது இந்த சேவை நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவை அதிகம் உள்ளது. ஆகவே இந்த நிறுவனங்கள் ஆட்களை விசாரிக்காமல் வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர். இந்த ஊழியர்கள் குறித்து பொதுமக்களும் ஏராளமான புகார் அளித்துள்ளனர்.

எனவே இந்த நிறுவனங்கள் தங்களின் ஊழியர்கள் குறித்து முழுவதுமாக விசாரித்த பிறகு அவர்களை பணியில் அமர்த்த வேண்டும். அத்துடன் அவர்கள் சாலை பாதுகாப்பு விதிகளை மீறியதாக புகார்கள் வரும் போது ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்த பிறகு அதற்கான வழிமுறைகளை நிறுவனங்கள் இயற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.