புதுடெல்லி:

மோட்டார் பைக் ரோந்துப் படையினரின் பணியை கண்காணிக்க டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.


புதுடெல்லியில் 1,116 மோட்டார் பைக் ரோந்துப் படையினர் பணியில் உள்ளனர்.

மார்க்கெட் பகுதி, முக்கிய இடங்கள், போலீஸாரின் நிரந்தர கண்காணிப்பு பகுதி, தற்காலிக கண்காணிப்பு பகுதிகளில் இவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.

இவர்களது பணித் திறன் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸ் இணை கமிஷனர் ராஜேஸ் குரானாவுக்கு போலீஸ் கமிஷனர் பட்நாயக் உத்தரவிட்டார்.

சமீபத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் குரானா தாக்கல் செய்த அறிக்கையில், மோட்டார் பைக் ரோந்துப் படை போலீஸாரின் பணியை மூத்த அதிகாரிகள் கண்காணிப்பதில்லை.

பணியின் போது போன் பேசுவதும், சாலையோரங்களில் நின்று கொண்டு அரட்டை அடிப்பதும் தொடர்கிறது.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட்டு, அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி மாற்று இடங்களுக்கு செல்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, போலீஸ் கமிஷனர் பட்நாயக் புதிய வழிகாட்டுதல்களை வகுத்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ரோந்துப் படையினரை 15 நாட்களுக்கு ஒருமுறை வேறு இடங்களுக்கு சுழற்சி முறையில் மாற்ற வேண்டும்.

அவர்களது நடமாட்டத்தை தலைமை அலுவலகத்திலிருந்து ஜிபிஎஸ் மற்றும் கேமிரா மூலம் கண்காணிக்க வேண்டும்.  மோட்டார் பைக் ரோந்துப் படையினர் விதிமுறைகளை மீறக்கூடாது. பொது இடங்களில் புகைப்பது, புகையிலை போட்டு பொது இடங்களில் துப்புவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.