மெரினாவில் காவல் ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் நடைபயிற்சி செல்ல வேண்டும்: சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை:

மெரினாவில் காவல் ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் நடைபயிற்சி செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பான வழக்கில்,  கடந்த விசாரணையின்போது, மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க டிசம்பர் 17-ந்தேதி வரை மாநகராட்சிக்கு கெடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன?  என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக  நடைபெற, காவல் ஆணையருடன், மாநகராட்சி ஆணையரும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும்  சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மெரினா கடற்கரையை சுத்தமாக வைக்க வேண்டும் என தொடரப்பட்ட பொது நல வழக்கும், ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் தொடர்ந்த வழக்கும், சென்னை உயர்நீதி மன்ற  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரை குப்பை கூளங்களாக காட்சி அளிக்கிறது. இதை சுத்தமாக வைத்திருக்க மீனவர் களும் உதவி செய்யவேண்டும். அவர்களை மீனவர் அமைப்புகள் ஊக்கப்படுத்த வேண்டும்’ என்று கருத்து நீதிபதிகள்  தெரிவித்தனர்.

மேலும், மெரினா கடற்கரையை சுத்தமாக வைக்க மாநகராட்சி ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும்,  மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே சாலைகளை ஆக்கிரமித்து மீன் கடைகள் வைக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்,   மெரினா கடற்கரையை சுத்தம் செய்வதற்கு என்று ஒதுக்கப்படும் நிதியை கொண்டு மீனவர்களுக்கு மீன் சந்தை அமைத்துக் கொடுக்காதது ஏன்? மெரினா கடற்கரையில் மீன் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? இதுவரை எத்தனை மீனவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது? என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டனர். இதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அப்போது,  மெரினாவில் சுத்தப்படுத்தும் பணிகள் முறையாக நடக்க காவல் ஆணையரும், மாநகராட்சி ஆணையரும் நடைபயிற்சி செல்ல சென்னை உயர்நீதிமன்றம் யோசனை  தெரிவித்து உள்ளது.