புழல் எதிரொலி : மேலும் 3 சிறைகளில் திடீர் சோதனை
சேலம்
புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழும் செய்தியை தொடர்ந்து சேலம், கோவை மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து காவல்துறையினர் புழல் சிறையில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கத்தை கத்தையாக பீடி மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், டிவிக்கள், மொபைல் உள்ளிட்ட பல பொருட்கள் சிக்கின.
மற்றும் உள்ள சிறைகளிலும் இது போல் மொபைல் உள்ளிட்ட பல பொருட்கள் உலவுவதாக தகவல்கள் வந்தன. இதை ஒட்டி சேலம் மத்திய சிறையில் 40 காவல்துறையினர் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது பீடி மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளும் மொபைல் பாட்டரிகளும் கிடைத்துள்ளன.
இதே போல கடலூர் மத்திய சிறையிலும் கோவை மத்திய சிறையிலும் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை தொடர்வதால் இந்த சிறைகளில் சிக்கிய பொருட்கள் குறித்த தகவல்கள் இன்னும் வரவில்லை. இந்த சோதனையில் கைதிகளிடம் பீடி, சிகரெக், கஞ்சா மற்றும் மொபைல் உள்ளனவா என்பதுடன் ஆயுதங்கள் உள்ளனவா என்னும் சோதனையும் நடைபெற்று வருகிறது.