பசுமை வழிச்சாலை விவகாரம்: மக்களை சந்திக்க அன்புமணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு…

சென்னை:

சேலம் – சென்னை இடையே அமைய உள்ள பசுமை வழி எக்ஸ்பிரஸ் சாலைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு சாலையை அமைத்தே தீருவோம் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது.

இந்த நிலையில்,  8 வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளையும், பொதுமக்களையும்  சந்தித்து கருத்துக் கேட்க இருப்பதாக பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் அறிவித்து இருந்தார். ஆனால், அவர் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி மறுத்து உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில்  பரபரப்பு நிலவி வருகிறது.

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை அமைக்கும் திட்டத்தின் காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள், கிணறு, குளம், குடியிருப்புகள், மா, தென்னை தோட்டங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசின் சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று 5 மாவட்டங்களில் கருப்புகொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த சாலை திட்டத்தால்,  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் மட்டும் அதிகமாக 26 கிராமங்கள் பாதிக்கப்படுtதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாமக இளைஞர் அணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் இன்று செங்கம் பகுதி முறையாறு கிராமத்தில்  பாதிக்கப்படும் பொதுமக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து கருத்துக் கேட்கும் வகையில் அந்த பகுதிக்கு சென்றிருந்தார்.

ஆனால், அவர் பொதுமக்களை சந்திக்க மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. மேலும், அன்புமணி பொதுமக்களுடன் சந்திப்பதால் பிரச்சினைகள் உருவாகும் என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்   மாவட்ட டிஎஸ்பி  தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.