கேமரா மூலம் திருடனை பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்: போலீசார் பாராட்டு

வியாசர்பாடியில் அடிக்கடி கொள்ளையில் ஈடுபட்டவரை பொதுமக்களே கேமரா பொருத்தி அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வியாசர்பாடி பி.வி. காலனி பகுதியில் அடிக்கடி கொள்ளை நடந்தது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. என்றாலும் கொள்ளையன் பிடிபடவில்லை. தொடர்ந்து திருட்டு நடந்து வந்தது.  இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், திருட்டை கண்காணிக்க இளைஞர் குழு ஒன்றை அமைத்தனர். அவர்கள் வியாசர்பாடியில் உள்ள முக்கிய தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினார்கள்.

இந்த நிலையில், நேற்று இரவு பி.வி.காலனியில் உள்ள ஒரு வீட்டில் திருட்டு நடந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை இளைஞர் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் இரவு 11.30 மணியளவில் திருட்டு நடந்த வீட்டுக்குள் ஒரு வாலிபர் சென்று வருவது பதிவாகி இருந்தது. இதையடுத்து அவரை இளைஞர்கள் அடையாளம் கண்டு அழைத்து வந்தனர்.

அவரிடம் செல்போன்கள், நகைகள் ஆகியவை இருந்தன. விசாரணையில் அவர் அந்த பகுதியில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. அவரை பொதுமக்கள் எம்.கே.பி. நகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் பிடிபட்டவர் பெயர் சாகுல் என்பதும், எம்.கே.பி.நகர் 17வது தெருவில் குடியிருப்பதும் தெரியவந்தது. சாகுலிடமிருந்த செல்போன்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், அவர் வைத்திருந்த திருட்டு நகைகள் கோல்டு கவரிங் என்று தெரியவந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பொதுமக்களின் இந்த முயற்சிக்கு போலீசார் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.