சென்னை:

சட்டசபையில் இன்று நடந்த கலவரத்தில் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்ததாக வெளியான புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி தி.மு.க கோரிக்கை விடுத்தது. சபாநாயகர் தனபால் இதை மறுத்துவிட்டார்.

இதை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சபாநாயகர் தனபால் சட்டசபை காவலர்கள் மூலம் தி.மு.க.வினரை குண்டு கட்டாக வெளியேற்ற உத்தரவிட்டார்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து எம்எல்ஏ.க்களும் பேரவை காவலர்களால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். இதில் ஸ்டாலின் சட்டை கிழிந்தது.

இந்நிலையில், பேரவை காவலர்களாக போலீஸ் அதிகாரிகள் மாறுவேடத்தில் வந்தார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் சட்டசபை காவலராக மாறுவேடத்தில் வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.