தூத்துக்குடி: தூத்துக்குடி மருத்துவமனைக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது, உள்ளே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 99 நாட்களாக அமைதியாக போராடி வந்தனர்.  நூறாவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட அவர்கள் சென்றபோது காவல்துறையினருக்கம் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்களை பல்வேறு அரசியல் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களை தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சந்தித்தார். அப்போது மருத்துவமனைக்கு உள்ளே செய்தியாளர்கள் எவரும் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வாசலிலேயே நிறுத்தப்பட்டனர்.

மேலும் துணை முதல்வரை சுற்றி மிகவும் பெரிய அளவில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று தூத்துக்குடி மருத்துவமனையில் மக்களை சந்தித்த போது, கோபத்தில் இருந்த மக்கள் அவரை கேள்விக்கணைகளால் துளைத்தனர்.  அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கடம்பூர் ராஜு மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். அங்கே இருந்த செய்தியாளர்கள் இதை வீடியோவாக வெளியிட்டனர்.

இதே நிலைமை பன்னீர்செல்வத்திற்கும் வரக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

“தர்மயுத்தம் (!) நடத்தியபோது ராத்திரி பகல் பாராமல் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ்., இப்போது புறக்கணிக்கிறாரே” என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.