திட்டமிட்டு கொல்லப்பட்ட மூவர்: மின் கசிவால் உயிரிழப்பு எனும் நாடகம் அம்பலம்

திண்டிவனம் அருகே ஏ.சி மின் கசிவில் மூவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் ராஜி. அவர் சொந்தமாக வெடிங் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி வட்டிக்கு கடன் கொடுத்து வருகிறார். இத்தம்பதியின் மூத்த மகன் கோவர்தனன், அதிமுக மாணவர் அணி தலைவராக உள்ளார். இரண்டாவது மகன், தாய் கலைச்செல்வியுடன் சேர்ந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். கடந்த 14 ம் தேதி இரவு, கோவர்த்தனனும், அவருடைய மனைவியும் ஓர் அறையிலும், ராஜி, தன் மனைவி கலைச்செல்வி மற்றும் இரண்டாவது மகன் கவுத்தமுடன் ஓர் அறையிலும் உறங்கியுள்ளனர்.

மறுநாள் காலையில் வீட்டில் இருந்த ஏ.சியில் திடீரென தீப்பிடித்து, ஏ.சி வெடித்து சிதறியது. இதில் கவுத்தமும், கலைச்செல்வியும் உடல் கருகி உயிரிழந்தனர். அதேநேரம் வீட்டின் வராண்டா பகுதியில் ராஜி இறந்துக்கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்த நிலையில் இருந்ததை கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக வழக்கு பதிந்து முதற்கட்ட விசாரணையை தொங்கினார். கோவர்த்தனனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு ஏ.சியை வாங்கியதாகவும், இதுவரை அதை சர்வீஸ் செய்யாத காரணத்தால் மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி வெடித்து இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து வீட்டில் ஆய்வு செய்த காவலர்கள், ஏ.சி வெடித்த அறையில் கிடந்த 2 மண்ணெண்ணெய் கேன்கள், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் இருந்து வந்த பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கூறி, விசாரணையை துரிதப்படுத்தியதில் மூவரும் கொலை செய்யப்பட்டு, பின்னர் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவர்தனனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரை தனி அறையில் வைத்து விசாரித்து வருகின்றனர். இக்கொலையை கோவர்தனன் செய்தாரா ? அல்லது, கூலிப்படை மூலமாக உறவினர்கள் செய்தார்களா ? என்கிற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி