மத்திய பிரதேச விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சரியே…..விசாரணை ஆணையம்

போபால்:

மத்திய பிரதேச மாநிலம் மண்டசாவுரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். பயிர்களுக்கு உரிய விலை வேண்டும். கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

 

இதையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறந்தனர். போலீசார் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மறுநாள் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ஜெயின் தலைமையில் ஆணையம் அமைத்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டது.

போலீசார் சுட்டதில் விவசாயிகள் இறக்கவில்லை என்று முதலில் வாதிட்ட அரசு பின்னர் அந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டது. இந்நிலையில் விசாரணை ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் போலீசார் தற்காப்புக்காக தான் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அன்றைய சூழ்நிலையில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது அத்தியாவசியமானது, சட்டப்பூர்வமானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.