Random image

பாரத் பந்த்: குஜராத்தில் 300 காங்கிரசார் கைது

அகமதாபாத்:

நாடு முழுவதும் இன்று பொதுவேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் காவல்துறையினரால்  பலவந்தமாக கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல். எரிவாயு  விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் இன்று நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துக்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

காவல்துறையினரால் பலவந்தமாக கைது செய்யப்படும் காங்கிரஸ் மூத்த உறுப்பினர்

டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ள பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் சாலை மறியல், ரெயில் மறியல், ஆர்ப்பாட்டம் என தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் குஜராத்தில் பாஜ மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவடா உள்பட 300-க்கும் மேற்பட்ட காங்கிரசார் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், லால் தர்வாஜா பகுதி குஜராத் கட்சி பொறுப்பாளர் ராஜீவ் சட்டவ் உள்பட ஏராளானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் மெஹ்சானா பகுதிகளில் பள்ளிகளில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.  மாநிலத்தின் சில பகுதிகளில் பெட்ரோல் பம்புகள் மூடப்பட்டு, காங்கிரஸ் தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்குபெற்று போராட்டத்தை வெற்றியடைய செய்தனர்.