பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி: போலீசார் தீவிர விசாரணை

புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனியில் ரூ.7½ லட்சம் மோசடி செய்த மேனேஜரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுவை நேரு வீதியில் பிரபல ஷூ கம்பெனி உள்ளது. இந்த ஷூ கம்பெனியில் இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கு ஷூ சப்ளை செய்யப்படும். அதுபோல் கடந்த 2016-ம் ஆண்டு இந்த ஷூ கம்பெனியில் இருந்து ஒரு நிறுவனத்துக்கு ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 476 மதிப்புள்ள ஷூக்கள் சப்ளை செய்யப்பட்டது. அதற்கான பணத்தை காசோலையாக அந்த நிறுவனம் ஷூ கம்பெனிக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அந்த பணம் கம்பெனி கணக்கில் செலுத்தப்படவில்லை. ஆண்டு கணக்கு தணிக்கையில் அந்த பணத்தை ஷூ கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்த சதீஷ் என்பவர் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ஷூ கம்பெனியின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசலு கிருஷ்ணன் பெரியகடை போலீசில் புகார் செய்தார். ஆனால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால் சீனிவாசலு கிருஷ்ணன் புதுவை கோர்ட்டில் முறையீடு செய்தார். இதன் மீது விசாரணை நடத்திய நீதிபதி இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும்படி பெரியகடை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதன்படி பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து ரூ.7½ லட்சம் பணம் மோசடி செய்த ஷூ கம்பெனி மேனேஜர் சதீசை தேடி வருகிறார்கள்.

கார்ட்டூன் கேலரி