புகாரளிக்க சென்ற இளம்பெண்ணை நடனமாடச் செய்து ரசித்த இன்ஸ்பெக்டர்!

அலகாபாத்: புகார் கொடுக்க வந்த 16 வயது இளம்பெண்ணை, புகாரை ஏற்க வேண்டுமெனில் முதலில் தன் முன்னாள் நடனமாட வேண்டுமென்று காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் மிரட்டி, அதன்விளைவாக அந்தப் பெண் நடனமாடிய வீடியோ ஒன்ற தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த அவலமான சம்பவம் நடைபெற்றுள்ளது நமது யோகி புகழ் உத்திரப்பிரதேசத்தில்தான்.

அந்த இளம்பெண்ணின் குடும்பம் ஓரிடத்தில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், அந்த உரிமையாளரின் மருமகன், அவர்களை அந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக காலிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு, அக்குடும்பத்தினரை தாக்கியுள்ளார். மேலும், அப்பெண்ணையும் துன்புறுத்தி அவமானப்படுத்தியுள்ளார்.

எனவே, அந்த நபரின் மீது புகாரளிக்க உத்திரப்பிரதேசத்தின் கோவிந்த் நகர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார் அந்த 16 வயது இளம்பெண். அப்போது, புகாரைப் பதிவுசெய்ய வேண்டுமானால், அப்பெண் முதலில் தன் முன்பாக நடனமாட வேண்டுமென கட்டாயப்படுத்தி நடனமாட வைத்துள்ளார் அக்காவல் நிலைய ஆய்வாளர். அந்த நடன வீடியோதான் தற்போது வைரலாகி, கண்டனங்களை குவித்து வருகிறது.