விவசாயி வீட்டில் நகை – பணம் கொள்ளை: போலீசார் விசாரணை

சோமரசம்பேட்டை அருகே விவசாயி வீட்டில் இருந்த மரப்பெட்டியை தூக்கி சென்ற மர்ம நபர்கள், அதில் இருந்த சாவியை எடுத்து வந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் கடைவீதி தெருவில் வசித்து வருபவர் பாக்கியராஜ். இவருடைய சித்தப்பா கணேசனின் மகள் சிவகாமிக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு பெண் அழைப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாக்கியராஜ் குடும்பத்தினர், பின்னர் தங்கள் வீட்டிற்கு சென்று படுத்து தூங்கி விட்டனர்.

இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர், பாக்கியராஜின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பீரோவை திறக்க முயன்றுள்ளனர். ஆனால் அதனை திறக்க முடியாததால், அருகில் இருந்த பழைய மரப்பெட்டியை தூக்கி சென்றனர். வீட்டிற்கு அருகே சிறிது தூரம் சென்றவுடன், அவர்கள் பெட்டியை உடைத்து பார்த்தபோது அதில் சில பொருட்கள் மற்றும் பீரோ சாவி இருந்துள்ளது. இதைக்கண்ட அவர்கள், பீரோ சாவியை மட்டும் எடுத்து கொண்டு மீண்டும் பாக்கியராஜின் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு சாவி போட்டு பீரோவை திறந்து, அதற்குள் இருந்த ரூ.10 ஆயிரம், 8 பவுன் நகை மற்றும் வங்கி ஆவணங்கள் சிலவற்றை அள்ளி சென்றனர்.

அதிகாலையில் வீட்டில் உள்ளவர்கள் கண் விழித்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்ததையும், அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின்னரே பீரோவில் இருந்த பணம் மற்றும் நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்து சோமரசம்பேட்டை போலீசில், பாக்கியராஜ் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். நேற்று திருமணம் நடைபெற்ற மணப்பெண்ணின் உறவினர் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி