திருவேற்காட்டில் ரவுடியின் வீட்டிலிருந்து செம்மரக்கட்டைகள் பறிமுதல்: காவல்துறை விசாரணை

திருவேற்காடு பகுதியில் வீட்டின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் விலை ரூ. 10 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவேற்காடு தேவி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். ரவுடியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக கொரட்டூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் இன்று காலை அவரை தேடி திருவேற்காடு வந்தனர். அப்போது ராஜேஷ், திருவேற்காடு அருகே உள்ள சின்னகோலடி என்ற இடத்தில் நண்பர் கோபி என்பவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவரது வீட்டில் ஒவ்வொரு அறையாக போலீசார் சோதனை செய்தனர். அப்போது சமையலறை அருகேயுள்ள ஒரு அறையில் 25 துண்டு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்த செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் 2½டன் எடையுள்ளது என்பதால், அதன் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், “கடந்த 4ம் தேதி தனது வீட்டுக்கு வந்த ரவுடி ராஜேஷ், செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து பதுக்கி வைத்திருக்கிறார். இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள வந்தோம். ஆனால் அவர் தனது நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்திருக்கிறார். காவல்துறையினர் இங்கு வருவதை அறிந்த உடன், இவ்வீட்டிலிருந்து தப்பித்து சென்றுவிட்டார். ராஜேஷ் குறித்து எங்களுக்கு தகவல் தராத காரணத்தால் கோபியை கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.

செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து ரவுடி ராஜேசும், கோபியும் கூட்டாக விற்பனை செய்து வந்தார்களா ? இவர்களுக்கு செம்மரக்கட்டை கிடைத்தது எப்படி ? என்று தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி