பெங்களூரு:   கே.பி.என் பஸ்களை  அந்த நிறுவனமே எரித்ததா? போலீஸ் விசாரணை

பெங்களூரு:

காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடகாவில்  கடந்த ஒருவாரமாக கலவர சூழல் நிலவுகிறது. தற்போது நிலைமை ஒரளவு சீரடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கலவர நேரத்தில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் கன்னட வெறியர்களால் எரிக்கப்பட்டன. பெங்களூரு நயந்தரஹல்லி என்ற இடத்தில் கே.பி.என். நிறுவனத்தின் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50 சொகுசு பேருந்துகளும் வன்முறையாளர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக  செய்தி வெளியானது,

இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் மேலாளர், “கலவரக்காரர்கள் தீ வைத்து பேருந்துகளை கொளுத்தினார்கள். காவல்துறை அவசர எண்ணுக்கு தொடர்புகொண்டோம். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் தொடர்பு கிடைத்தது. தீயணைப்பு துறையினரும் மிகவும் தாமதமாகவே வந்தனர்” என்று தெரிவித்தார்.

karnataka-bus-burst

இந்தச் சம்பவம் குறித்து கர்நாடக காவல்துறையினர்  வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், “பேருந்துகள் எரிக்கப்பட்டது அந் நிறுவனமே திட்டமிட்டு செய்த சதியாக இருக்கலாம். இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக இப்படி செய்திருக்கலாம்” என்று காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.

காரணம், பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டு சில மணி நேரம் கழித்தே காவல்துறையையும், தீயணைப்புத் துறையையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொடர்புகொண்டதாக காவல்துறையனர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் எரிக்கப்பட்ட பேருந்துகள் கர்நாடக பதிவெண் கொண்டவைதான். வன்முறையாளர்கள், தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களையே எரித்துவந்தனர்.

இந்த நிலையில், “கே.பி.என்.  நிறுவனத்தின் மேலாளரை விசாரிக்க வேண்டும்.  சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ய வேண்டும்” என்று கன்னட அமைப்பினர்  காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதே நேரம், “இந்த பேருந்து எரிப்பு சம்பவம் குறித்து கர்நாடக காவல் துறையினர் விசாரித்தால் உண்மை வெளிப்படாது. சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” என்று கே.பி.என். நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம், “கே.பி.என். நிறுவனம் நடத்தும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் லைசன்ஸ் தருவதே கிடையாது. கர்நாடகா உட்பட அண்டை மாநிலங்களில் பதிவு செய்து இயங்குகின்றன. வாகனங்கள் இயக்குவது, பயணிகளிடம் டிக்கெட் முறைகேடு, ஓட்டுனர்களுக்கு உரிய சம்பளம் அளிக்காதது, தரமற்ற ஓட்டுனர்கள், விபத்து நேரத்தில் பயணிகளை கைவிடுவது என கே.பி.என். மீது பல்வேறு புகார்கள் உண்டு. ஆகவே கர்நாடக காவல்துறையினரின் சந்தேகம் தவறில்லை” என்று பல தரப்பிலும் சொல்லப்படுகிறது.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: burning, bus, india, karnataka, kpn, police investigation, இந்தியா, எரிப்பு, கே.பி.என்., பஸ், பெங்களூரு, போலீஸ், விசாரணை
-=-