சென்னை,

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மெரீனா கடறக்ரை நோக்கி வந்தவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தி, ஓட ஓட விரட்டியடித்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக மாணவர்கள் போராடி வருகின்றனர். ஆனால், தற்போது இயற்றப்பட்டுள்ள அவரச சட்டம் வேண்டாம், நிரந்தர தீர்வு வேண்டும் என்று இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணியில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்ல போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர். அவசர சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறி போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கோரிக்கை விடுத்தனர்.  சட்ட முன்வடிவு நகலையும் மாணவர்களுக்கு அளித்தனர். ஆனாலும் போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.

இதனையடுத்து மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். வலுகட்டாயமாக அகற்றி வரும் போலீசுடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிரித்து, குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றி வருகின்றனர்.

அதையும் மீறி நூற்றுக்கணக்கான இளைஞர்கள்  கலைந்து செல்ல மறுத்து கடலை நோக்கி சென்றனர். அங்கே அப்துல் கலாம் படத்தை பிடித்தபடி கைகளை பிடித்துக்கொண்டு நடத்தி வருகின்றனர். கடலில் இறங்கி போராடி வருகின்றனர்.

இதன் காரணமாக பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் மீண்டும் மெரினாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதனால்,  மெரீனாவில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில்  கடற்கரைக்கு வரும்  அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் இருந்து ஏராளமானோர் மெரீனாவை நோக்கி பேரணியாக  செல்ல முயன்றனர். ஆனால், அவரை உள்ளே வர விடாமல். தடுப்புகளை வைத்து தடுத்தனர்.

இதன் காரணமாக தடுப்புகளை மீறி உள்ளே வர முயன்ற இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.  இதில் பலர் காயமடைந்தனர்.

அவ்வை சண்முகம் சாலையில் பேரணியாக வந்தவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்து தடியடி நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை தற்போது போர்க்களம்போல் காட்சி அளிக்கிறது.