குஜராத் போலி என்கவுண்ட்டரை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நெருக்கடி…..பாதுகாப்பு வாபஸ்

மும்பை:

குஜராத் போலி என்கவுண்ட்டர் சம்பவத்தை வெளிச்சம் போட்டு காட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

13 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் சோக்ராபுதீன் ஷேக், இவரது மனைவி கவுசெர் பி, உதவியாளர் துள்சி பிரஜபதி ஆகியோரது என்கவுண்ட்டர் வழக்கு அம்மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் லால்ஜிபாய் சோலங்கி என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைதி மற்றும் விடாமுயற்சி குணம் கொண்ட இவர் இந்த வழக்கை தீவிரமாக புலன் விசாரணை செய்தார். இது போலி என்கவுண்ட்டர் என்பதை நிரூபித்தார்.

இதன் பின்னணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிட்டார். மேலும், இச்சம்பவத்தில் தற்போதைய பாஜக தேசிய தலைவரான அமித்ஷாவுக்கும் இந்த சதி திட்டத்தில் தொடர்பு இருந்ததை வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த வழக்கை சிபிஐ.யும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தி வந்தது. 2014ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த வழக்கின் விசாரணை தடம் மாற தொடங்கியது. சாட்சிகள் பல்டி அடித்தனர். ஆனால், சோலங்கி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதனால் காவல் துறை மற்றும் பாஜக.விடம் இருந்து அவருக்கு நெருக்கடி வந்தது.

இது குறித்து ‘தி வயர்’ இதழுக்கு சோலிங்கி பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில்,‘‘மும்பை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணையை முன்னெடுத்து செல்ல தயாராக இருக்கிறேன். ஆனால், என்னை இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தின் உள்ளேயே செல்ல முடியாத வகையில் அரசு அனைத்து தந்திரங்களையும் கையாண்டுள்ளது’’ என்றார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 9 ஆண்டுகளாக மாநில அரசு சார்பில் இவருக்கு அளிக்கபப்ட்டு வந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அவர் இன்று (21ம் தேதி) வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். சோலங்கி கூறுகையில்,‘‘ எனக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் வரை நான் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திடீரென மரணம் அடைந்துவிட்டார்.

இந்த நிலையில் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரான நான் எப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்க முடியும். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க அரசு எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்க தயாராக உள்ளது. அதனால் என்னையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள்’’ என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சோலங்கி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.